காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும், * ஆசையினால் அங்கவத்தப் பேரிடும் ஆதர்காள், * கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்திருமினோ, * நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.
பொய் சொல்லுகையும், பகவத் காரியங்களில் இணக்கம் இல்லாதவர்களாய் இருக்கும் மனிதர்களை நினைத்து, அவர்களையும் விட முடியாத ஆழ்வார், அவர்களின் மேல் கருணை கொண்டு, அவர்களுக்கும் நல்லதை உபதேசிப்போம் என்ற கருத்தை மனதில் கொண்டு, தங்களுடைய கடைசி காலத்திலாவது பகவத் காரியங்களில் ஆசை கொண்டு, அவனை மனதில் நிறுத்தி, எம்பெருமானின் நாம ஸம்கீர்த்தனங்களை சொல்லி வாழ்ந்தால் அவர்கள் மேல் உலகத்தில் பெறும் பெற்றை சொல்லி மாளாது என்பதில் தொடங்கி, இறுதி காலத்தில் வரும் சிரமங்களையும் சொல்லி, அந்த காலம் வருவதற்கு முன்னால் எந்த ஒரு வித வகையிலாவது எம்பெருமானின் திருவடியை அணுகி இந்த உடலை பிரிந்தால், யம கிங்கரர்கள் கொடுக்கும் தண்டனைகளில் இருந்து தப்பி, அர்ச்சிராதி மார்க்கம் வழியாக பரமபதம் அடைந்து, நித்யசூரிகளுடன், இந்த கால தத்துவம் என்று ஒன்று உள்ளவரை எம்பெருமானின் புகழ் பாடி, அவனுக்கு தொண்டு செய்து வாழலாம் என்று அவர்கள் நெஞ்சுக்கு படும்படியாக சென்ற பதிகத்தில் உபதேசம் செய்கிறார்.
இந்த பதிகத்தில், பகவத் விஷயத்தில் ஆசையோ நாட்டமோ இல்லாதவர்களையும், அவன் திருநாமங்களை சொல்ல இயலாதவர்களையும், ஒருவழியால், அவர்களையும் எம்பெருமான் திருநாமத்தில் ஈடுபடுத்தி, அவர்களையும் உஜ்ஜீவிக்க செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, அவர்களுக்கு உபதேசம் செய்கிறார். உலக விஷயங்கள் மனதில் கொண்டு, அவர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தாலும், இந்த பிறவியில் நீங்கள் ஆசைபடுகின்ற அந்த பலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், மறுமைக்கும் பயன் கிடைப்பதில்லை என்றும் சொல்லி, அதனை தவிர்த்து, பிச்சை எடுத்தாலும், சர்வேசவரனுடைய திரு நாமங்களை தங்கள் பிள்ளைகளுக்கு இட்டு, அவனை வாழ்த்தி, அவனுக்கு பிடித்தவர்கள் ஆகுங்கள் என்கிறார். இப்படி செய்பவர்கள் நரகதிற்கு போகாமல், உஜஜீவிப்பார்கள் என்று அவர்கள் நெஞ்சங்களுக்கு தெளிவிக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.1
காசுக்கும் தலைப்புகளில் நல்ல கரையை உடைய புடவைகளுக்கும் அங்கே ஒரு நெல் காற்றைக்கும் ஆசையாலே அவர்களுடைய மிகவும் பயனற்ற பெயர்களை உங்கள் பிள்ளைக்கு இடுகிற அறிவு கேடர்களே, நம்மை தாங்கி, துக்கங்களை களைபவனாக சர்வ சேஷியான நாராயணனுடைய திருநாமங்களை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டு, நீங்கள் அந்த பிள்ளையுடன் ஸ்நேகித்து சந்தோஷமாக இருங்கள்; அந்த பிள்ளையின் தாய் நரகம் அடைய மாட்டாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உலகத்தில் பலர் தம் மக்களுக்கு இந்திரன், சந்திரன், குபேரன் என்று இவை போன்ற பெயர்களை இடுவது, தங்களுக்கு இந்த பிறவியில் எந்த பலன் ஆகவும் இல்லாமல், மறுமைக்கும் எந்த வித பயனும் இல்லாமல் இருக்கும் என்கிறார். அந்த பெயர்களை இட்டால் நாலு காசு கிடைக்கும், நல்ல ஆடை கிடைக்கும் என்று இந்த உலக விஷயங்களில் உண்டான விருப்பத்தினால் அப்படி பெயர்கள் வைத்து இருக்கலாம். அப்பெயர்களை இடுபவர்கள் அறிவுள்ளவர் அல்லர்; அவர்கள் இடும் பெயர்கள் தீங்கு விளைவிக்க தக்கவை என்றும், ஆதலால் அவற்றை ஒழித்து பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமங்களை இட்டால், அவர்களைப் பெற்ற தாய் தந்தையர் உய்ந்து போவர் என்று உபதேசிக்கிறார். அப்படி இல்லாவிட்டால், அவர்கள் நரகம் புகுவார்கள் என்பது வெளிப்படை.
Leave a comment