செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல், * பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன், * சித்தம் நன்கொருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார், * சித்தம் நன்கொருங்கித் திருமால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.10
இறந்து போகும் போது, யம கிங்கரர்கள் செய்யும் செயல்களை நினைத்து, ‘அயர்வறு அமரர்கள் அதிபதி’ பக்கம் பக்தி உடையவர்களாய் இருந்து பின்பு இறந்தவர்கள் பெறுகிற பேறு தன்னை ஸம்ஸாரத்தை வென்ற மிடுக்கை உடையவனான தோள்களை உடையவராய் ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் மூன்று கரணங்களையும் நன்றாக ஒருமைப்படுத்தி திருமால் விஷயமாக அருளிச் செய்த சொல்மாலையான இந்த பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் (ஆழ்வாரைப் போல) சித்தம் நன்கு ஒருங்கி, திருமால் மேல் குடி கொண்ட மனதை உடையவர்கள் ஆவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தேவபிரான் மேல், என்று சொன்னது, ‘அயர்வரும் அமரர்கள் அதிபதி’ யை (திருவாய்மொழி 1.1.1) சொல்கிறது.
சித்தம் நன்கொருங்கித் என்று சொன்னது ‘ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி‘ (பெரியாழ்வார் திருமொழி 4.5.1) என்கிறபடி மூன்று கரணங்களையும் ஒருபட வழி நடத்துவது.
மரண காலத்தில் யமகிங்கர்கள் பொறுக்க முடியாதபடி நலிவர்களே!’ என்று நினைத்துத் தீய வழியில் செல்லாமல் எம்பெருமான் பக்கம் அன்பு பூண்டிருந்து, பின்பு இறப்பவர்கள் பெறும் பேற்றைக் குறித்துப் பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், எம்பெருமானிடத்து குடி கொண்ட நெஞ்சினை உடையவர்களாக பெறுவர்கள் என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Leave a comment