திவ்ய பிரபந்தம்

Home

4.5.8 கூடிக் கூடி உற்றார்கள்

பெரியாழ்வார் திருமொழி 4.5.8

ஒருவனுக்கு இறுதி காலம் வரும் போது, சுற்றத்தினர் எல்லாரும் கூட்டமாக இருந்து இவன் செய்த கெட்ட காரியங்களை சொல்லாமல், நல்ல காரியம் சிலவற்றை சொல்லி, பாடி ஒரு பாடையில் இவனை இட்டு நரிக்கூட்டத்திற்கு ஒரு பாகுக் குடம் பச்சையாக கொடுப்பாரைபோலே கோடிப் புடவையை இட்டு மூடி, (காட்டுக்கு கொண்டு செல்வதற்கு) முன்னே, ஸ்ரீ கௌஸ்துபத்தை அணிந்து இருக்கும் சர்வ சுலபனான ஸ்ரீகிருஷ்ணனுடன் ஒரு நினைவாய் அவன் குணங்களில் அனுபவித்த நெஞ்சத்தை உடையவராய் இருந்தால், அனுபவிக்க வேண்டிய யமபுரத்தை கடந்து (செல்லாமல்) உஜ்ஜீவிக்க கூடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மரண காலத்துக்கு முன்னமே எம்பெருமான் பக்கலில் நெஞ்சைச் செலுத்தினால் யம லோகத்துக்குத் தப்பிப் பிழைக்கலாம் என்று சொல்கிறார்.

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து என்று சொன்னது, எத்தனை கெட்ட செயல்கள் செய்து இருந்தாலும் அவற்றில் ஒன்றையும் சொல்லாமல், நல்ல காரியம் ஒன்று செய்யப் பட்டு இருந்தாலும், அதனைப் பலவாகப் பெரிது செய்து உரைப்பார்கள். சுக்ரீவன், வாலி மறைந்த போது, ‘நான் முன்பு அவன் கையில் அகப்பட்ட போதே என்னை கொன்று இருக்கலாம், அப்படி என்னை கொல்லாமல் விட்டவனை நான் கொன்றேனே’ என்று புலம்ப, அதனை கேட்டு ஸ்ரீ ராமனும் சோகப்பட்டது இங்கே சொல்லலாம். “ந த்வாஂ ஜிகாஂஸாமி சரேதி யந்மா- மயஂ மஹாத்மா மதிமாநுவாச. தஸ்யைவ தத்ராம! வசோநுரூப- மிதஂ புநஃ கர்ம ச மேநுரூபம் (கிஷ்கிந்தா 24.8). இப்படி எல்லோருக்கும் கிருபை பிறக்கும் சமயமாக இறுதி காலம் உள்ளது என்கிறார்.

நரிப் படைக்கொரு பாகுடம் போலே என்று சொன்னது, வீட்டில் இருந்து பாடையை மூடிக் கொண்டு போவதைப் பார்த்தால், சுடுகாட்டிலுள்ள நரிப்படைகளுக்கு, உணவாகும் வண்ணம் பாகு குடம் எடுத்து கொண்டு செல்வது போல மற்றவர்கள் நினைக்கும்படியாக இருக்கிறது என்கிறார். அது மட்டும் இல்லாமல், ‘யமலோகத்திற்கு பாவிகளை நலிவதற்கு என்று ஏற்படுத்தப்பட்டுள்ள நரிப்படைகளுக்குப் பாகுக்குடம் கொண்டு போவது போல’ என்றும் உரைக்கலாம். நரிப்படைகளுக்குப் பாத காணிக்கை கொண்டு போவது போல என்றும் சேர்த்து கொள்ளலாம். பாவங்களின் பயனை அநுபவிப்பதற்கு என்று குறிக்கப்பட்ட இடம் யமலோகம் என்று உறுதியாகிறது.

கூடி ஆடிய உள்ளத்தரானால், முதல் திருவந்தாதியில் (67) ‘உயிரும் தருமனையே நோக்கும் ஓண் தாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு.’ என்று சொன்னது போல ஆகும் என்கிறார். அதே போல, திருவாய்மொழி (4.9.10)ல் சொல்லிய ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே’ என்ற நிலையை அடைவார்கள் என்கிறார்.

Leave a comment