தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து, * பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம், * இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற நோக்கி * மன்னவன் மதுசூதன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.7
தென் திசைக்கு நிர்வாககனான யமனுக்கு கிங்கரர்கள் மூன்று கரணங்களிலும் (நெஞ்சம், வாய், கை) ஒரு செவ்வை இல்லாதவர்கள். எருதுகளை அடக்குபவர்களை போலே புகுந்து, பின்னையும் பாசக் கயிற்றினால் கட்டி, வருந்த செய்து, முகம் கீழ்பட யம லோகத்தளவு இழுப்பதற்கு முன்னே, தென்னவனுக்கு மன்னனானவனை, இன்னான் என்று அவனது ஏகாந்த குணங்களை அனுசந்தித்து நெஞ்சில் ஞானம் இல்லாத தன்மை என்ற இருளை அகற்றி, மது என்ற அரக்கனை கொன்றவன் என்று சொல்லுபவர்கள், தாங்களே பரமபதத்தில் நித்ய சூரிகள் செய்யும் கைங்கர்யதிற்கும் ஸ்ரீவைகுந்த நாதனுடன் மன்றாடுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஈரநெஞ்ச, இளநெஞ்சு அற்றவர்களான யமகிங்கார்கள், எந்தவித பாரபட்சம் இல்லாது எருதுகளை அடக்குவார் போல வந்து கட்டி அடித்து, செந்நாய்களை இழுத்துக் கொண்டு போவது போலத் தலைகீழாக இழுத்துக் கொண்டு யம லோகத்துக்குப் போகும்படியான கெட்ட நேரம் நேரிடுவதற்கு முன்னமே, அந்த யமனுக்கும் தலைவனான எம்பெருமானுடைய ஸ்வரூப சுபாவங்களை வாயால் சொல்லியும், நெஞ்சால் நினைத்தும், இவ்வகைகளாலே அந்த எம்பெருமானை மனதில் கொண்டு, மேலுள்ள காலத்தையும் திருநாம ஸங்கீர்த்தங்களாலேயே போக்க வல்லவர், பரமபதம் (ஸ்ரீவைகுந்தம்) போய்ச் சேர்ந்து, நித்ய ஸூரிகளுடைய கைங்கரியத்தை, தாம் பெறுவதற்கு எம்பெருமானோடு மன்றாடப் பெறுவர்கள் என்கிறார்; எனவே, பரமபத ப்ராப்தியில் சந்தேகம் இல்லை என்று சொல்கிறார்.
தென்னவன் என்பது தெற்கு திசையின் தலைவன், யமன் என்று சொல்கிறார். யமகிங்கரர்கள் செய்யும் வேதனைகளை திருமங்கைஆழ்வார் பெரிய திருமொழி (1.6.3)ல் ‘நமன் தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்‘ என்று குறிப்பிட்டு உள்ளார்
Leave a comment