திவ்ய பிரபந்தம்

Home

4.5.6 அங்கம் விட்டவை ஐந்தும்

பெரியாழ்வார் திருமொழி 4.5.6

ஐந்து பிராணங்களும் உடலை விட்டு நீங்கி அருகில் இருந்தவர்கள் மூக்கில் கையை வைத்து ஆவி இல்லை என்று அறிந்த பின்னர் ‘இனி இவன் பிழைக்கும்’ என்ற ஆசையை விட்டு (அங்கு இருந்தவர்களை, இப்போது என் ‘ என்று வந்தவர்கள் கேட்க) கையை விரித்து மெல்ல தலையை தொங்க விடுவதற்கு முன்பு, மரக்கலங்களானவை இடை விடாமல் உலாவுகின்ற கடலில் கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய சேஷ்டிதனாய், மது என்கிற அரக்கனை கொன்றவனான எம்பெருமானை நெஞ்சிலே தங்கும்படி செய்து பிராப்தமுமாய் ஒரு தருமம் ஒருக்கால் பண்ணுபவர்கள் காலம் உள்ளவரையில் அவனை சேவித்து இருக்கலாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வங்கம் விட்டுலவும் கடற் பள்ளி மாயனை என்றது மரக்கலம் உலாவும் கடலில் கண் வளர்ந்துள்ள ஆச்சர்ய பூதனை சொல்கிறது. மேலும் மாயனை என்றது ஞானத்துடன் தன் இச்சையால் கண் வளர்ந்துள்ளதை சொல்கிறது. ‘பண்டு அரவம் திரை உலவு குரை கடல் மேல் அரவு இன் அணை குலம் வரை போல் கிடந்து ‘ (பெரிய திருமொழி 3.6.7) என்று இருப்பவன் ஆயிற்றே என்கிறார்.

மதுசூதனை என்று சொன்னது, ‘வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே, வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்றமர் கள்ளர்போல் கண்ணபுரத் துறை யம்மானே‘ (பெரிய திருமொழி, 8.10.7) என்று தன்னுடைய அடியவர்களை அவர்களின் விரோதிகளிடம் இருந்து காப்பது சொல்லப்பட்டது.

ஆவதோர் கருமம் என்பது ‘நம எனல் ஆம் கடமை அது‘ (திருவாய்மொழி 3.3.6) சொல்லிய ஆத்ம சமர்ப்பணம் ஆகும்.

பிராணம், அபாதம், வயாநம், உதாகம், ஸமாநம் என்ற பஞ்ச பிராணன்களும் உடலை விட்டு ஓழிந்த பின்பு, அருகிலுள்ள சொந்தங்கள் அந்தப் பிணத்தின் மூக்கில் கையை வைத்துப் பார்த்து ‘ஆவி போயிற்று’ என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு, அவ்வுடலில் ஆசையை விட்டிட்டு, யாரேனும் வந்து ‘அவர்க்குத் திருமேனி எப்படி இருக்கின்றது?’ என்று கேட்டால் அதற்கு அவர்கள் வாய்விட்டு மறுமொழி சொல்ல முடியாமல், ‘உயிர் போயிற்று’ என்பதைக் காட்டும்படி கையை விரித்துக் காட்டிவிட்டு, ஒரு முலையில் இருந்து கொண்டு தலை கவிழ்ந்து அழும்படியான காலம் நேரிடுவதற்கு முன், திருப்பாற்கடல் எம்பெருமானை நெஞ்சால் நினைத்துக் கொண்டு தங்களுக்கு ஸ்ரூபமான ப்ரபத்தியை (சரணாகதியை) அநுஷ்டிப்பவர்கள், எந்நாளும் அவனை அநுபவிக்கக் கூடிய பேற்றைப் பெறுவர்கள் என்கிறார்.

Leave a comment