திவ்ய பிரபந்தம்

Home

4.5.5 மடி வழி வந்து நீர் புலன்

பெரியாழ்வார் திருமொழி 4.5.5

யம கிங்கரர்களை கண்ட பயத்தாலே, மடியில் உள்ள லிங்கத்தின் வழியே வந்து சிறுநீர் பெருகவும் வாயில் பெய்த பொரிக்கஞ்சியும் கழுத்தை அடைக்க மறுபடியும் கடை வழியாலே வழியவும் கண் உறக்கம் கொள்வதற்கு முன், ரிஷிகேசன் என்று துதிக்க வல்லீரகள் ஆனால், யமலோகத்தில், உங்களுடைய துடையில் செந்நாய்களானவை கவ்வ மாட்டாது; உங்களை சூலத்தால் யமகிங்கரர்கள் குத்தவும் மாட்டார்கள்; நீங்கள் நடுவழியிலே வஸ்திரத்தையும் இழக்க மாட்டீர்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மரண காலம் கிட்டும் போது, உலகம் முழுவதும் எங்கும் யம கிங்கரர்கள் தென்படுவதாக நினைத்து, அதனால் உண்டான அச்சத்தினால் கிடந்தபடியே மூத்திரம் விடுவார்கள்; வாயில் விட்ட பொரிக் கஞ்சி உள்ளே செல்லாது. கழுத்தை அடைத்துக் கடைவாய் வழியாகப் பெருகும்; இப்படிப்பட்ட அவஸ்தைகள் பட்டுக்கொண்டு இருக்கும் போதே, எம்பெருமான் பேர் சொல்லக் காலம் வாய்க்காது மாளப்பெற்றால், யம லோகம் போக நேர்ந்து, வழியிடையில் செந்நாய்களால் துடை கவ்வப் பட்டும், யம கிங்காரர்களினால் சூலம் கொண்டு குத்தப் பட்டும், இடுப்பில் துணியை இழக்கப்பெற்றும், இப்படி பல துன்பங்கள் பட வேண்டி வருமாதலால், அவற்றுக்கு எல்லாம் வருவதற்கு முன்பு எம்பெருமானை வாழ்த்தி வந்தால், இடர்பாடு ஒன்றும் நேராது என்கிறார்.

Leave a comment