மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி, * காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் * மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி, * வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.4
மேல் பக்கம் எழுந்த ஒரு காற்று (வாயு) மேல் எழுந்து நெஞ்சு கீழே இடிய விழுந்து கால்களும் கைகளும் பதைபதைத்து தீர்க்க நித்திரை உண்டாவதற்கு முன் சகல வேதங்களுக்கும் காரணமான திரு மந்திரத்தில் உள்ள பிரணவத்தை அளவெடுத்து உச்சரித்து கடல் போன்ற வடிவை உடைய எம்பெருமானை அடைய வல்லீரகள் ஆகீல் பரமபதத்தை அடையலாம் மற்றும் அடியார் கூட்டங்களுடன் கூடலாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உயிர் உடலை விட்டு நீங்குவதற்கு முன் ஏற்படும் நிகழ்வுகளை முதல் இரண்டு அடிகளில் சொல்கிறார். அவை, மேல்முகமாக, மூச்சுக் கிளம்புதலும். நெஞ்சம் இடிந்து விழுதலும், கை கால்கள் பதை பதைத்தலும் ஆகும். இப்படிப்பட்ட விகாரங்களை/மாற்றங்களை அடைந்து மாளுவதற்கு முன்னமே, ஸகல வேதங்களுக்கும் சாரமான ஓம் என்னும் பிரணவத்தை, உச்சரிக்க வேண்டிய முறை வழுவாது உச்சரித்து, எம்பெருமானை இறைஞ்சினால், பிறப்பும் பிணியும் கொண்ட பிறப்பற்று, ஒளிக் கொண்ட சோதியுமாய் அடியார்கள் கூட்டங்களை உடன்கூடப் பெறலாம் என்கிறார்.
Leave a comment