சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லென்று, சுற்றும் இருந்து, * ஆர்வினாவிலும் வாய் திறவாதே அந்தக் காலம் அடைவதன் முன்னம், * மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி, * ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
பெரியாழ்வார் திருமொழி 4.5.3
புத்தி மறதியாலே பொருள்களை புதைத்து வைத்து இருந்தால், ‘அது இருக்கும் இடம் சொல்’ என்று நான்கு புறத்திலும் சூழ இருந்து சுற்றத்தார் கேட்டாலும், அருமைப் பட்டுத் தேடி, சுற்றத்தார் முதலியவர்களுக்கும் கொடுக்காமல் மறைத்து வைத்த பொருள், கொடுத்து வைத்த இளையாள் கேட்டாலும், வாயைத் திறவாதபடி முடிவு காலம் வருவதற்கு முன்னே, மனது என்று சொல்லப்படும் ஒரு பகவத் சந்நிதியை உண்டாக்கி, திருமகளின் தலைவனான தெய்வத்தை நிலை நிறுத்தி, அன்பாகிற ஒரு பூவினை சமர்ப்பிக்க வல்லவர்களுக்கு, யமனுடைய தூதுவர்கள் தண்டனையில் இருந்து பிழைப்பார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இவன் கையில் இருந்தவற்றை ஒன்றும் இல்லாதபடி பறித்துக் கொண்ட சொந்தங்கள், சூழ்ந்து கொண்டு, “எங்களுக்குத் தெரியாமல் எந்த மூலையிலாவது ஏதாவது ஓரு பொருள் வைத்து இருந்தால், அதை எங்களுக்குச் சொல்லு” என்று பலவாறு நிர்ப்பந்தித்துக் கேட்கும் சுற்றத்தார்கள் என்கிறார். நமக்கு தெரியாமல் மற்றவருக்கு கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் அங்கிருந்து நகராமல் இருக்கும் சுற்றத்தார்களை, ‘திருமாலை பாடக்கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன்‘ (திருநெடுந்தாண்டகம் 14) என்று எண்ணும்படி உள்ள ஆத்ம பந்துக்கள் என்கிறார். இவரோ ‘துஞ்சும் போது அழைமின், துயர்வரில் நினைமின், துயரிலீர் சொல்லிலும் நன்றாம்‘ (பெரிய திருமொழி 1.1.10) என்றபடி இருப்பவர்; அவர்களுக்கு மறுமொழிச் சொல்ல முடியாதபடி, மரண காலம் வருவதற்கு முன்னமே, எம்பெருமானை நெஞ்சில் நிறுத்தி அன்பு பூண்டிருக்க வல்லவர்கள், யம கிங்கரர்களுடைய துன்பங்களுக்கு தப்பிப் பிழைப்பார்கள் என்கிறார்.
தங்களுடைய நெஞ்சினில் கோவில் கட்டி, அதிலே மாதவன் என்னும் தெய்வத்தை வைத்து, ஆர்வம் என்று பூ இட வல்லவர்கள் என்று இவர்களை குறிப்பிடுகிறார்.
‘திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன, திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்‘ (திருவாய்மொழி 10.8.1) என்பது போல நெஞ்சினில் வந்து புகுந்தான்; இவர் நெஞ்சம் மாறுவதற்கு முன்னே, பிராட்டியும் புகுந்து நெஞ்சு நிறைந்தான் என்கிறார்.
திருச்சந்தவிருத்தம் (7.4)ல், ‘நின்ற எந்தை ஊரகத்து, இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம், அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன், நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே‘ சொல்லியது போல, உகந்து அருளிய நிலங்களில் அனுபவிக்கலாம்படி இவர் உள்ளத்தே அனுபவிக்கலாம் என்கிறார். அதே போல பெரியதிருமொழி (7.9.1)ல் ‘சிறு புலியூர்ச்சல சயனத்துள்ளும், எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே‘ கூறியதும், பெரிய திருமொழி (1.10.9) ல் சொல்லிய ‘வந்தாய் என்மனம் புகுந்தாய், மன்னி நின்றாய்‘ என்பதுவும், பெரிய திருமொழி (6.2.3)ல் சொல்லிய ‘வந்து வந்து என் மனத்து இருந்த தேனே‘ என்பதுவும், பெரிய திருமொழி (11.5.10)ல் சொல்லிய ‘வெள்ளத்தான் வேங்கடத்தான் எனிலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் ‘ என்பதுவும் இங்கே குறிப்பிடப்பட்டு உகந்து அருளிய நிலங்களுடன் இவர் திருவுள்ளம் ஒப்பிடப் படுகிறது.
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு என்பதை ஆத்ம பந்துக்களையும் தேஹ பந்துக்களையும் மறைத்து வைத்த பொருளை கொண்டு கோவில் அமைத்து, நந்த வனம் அமைத்து, திருப்பள்ளியையும் அமைக்க தூண்டுமவன் என்று சொல்லி, ‘நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன், வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” (பெரிய திருமொழி 1,4.9) என்று இவனை ஆதியிலே இவன் திருவடிகளில் படைத்து பூவோடு பூவை சேர்க்க வல்லார் என்கிறார்.
யம கிங்கரர்களால் வரும் துன்பங்களை, ‘வெஞ்சொலாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுள‘ (பெரிய திருமொழியில் 5.8.4) என்று சொன்னதைக் கூறுகிறார்.
Leave a comment