திவ்ய பிரபந்தம்

Home

4.5.2 சீயினால் செறிந்தேறிய புண்

சீயாலே மிகவும் நிறைந்த புண்ணின் மேல் ஈ இருந்து முட்டையிட்டு புழுத்து நீராகப் பாயும் போது, ஒர்இடம் தப்பாமல் ஈயாலே அரிக்கப்பட்டு அது பொறுக்க மாட்டாமல் மயங்கி, இறுதி காலத்தை எட்டுவதற்கு முன்னே, வாயினால், ‘நமோ நாராயணா’ என்று சொல்லிக் கொண்டு உச்சியிலே கூப்பின கைகளை கொண்டவர்களாய் போனால் பிறகு நித்ய முகதர்களை உத்திரவாதிகள் ஆக்கினாலும் இவ்வுலகத்திற்கு எப்போதும் பரமபதத்தில் உள்ளார் இவர்களை செல்ல விட மாட்டார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பற் பல துன்பங்களுக்கு இலக்கான இந்த உடம்பின் வேதனைகளால் மயக்கமுற்று மரணமடைவதற்கு முன், வாயாலே திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்தித்துக் கொண்டு முடி மேல் கை கூப்பித் தொழுபவர்கள் பரம பதம் போய்ச் சேருவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்படி அவர்கள் அங்குப் போய்ச் சேர்ந்த பின்னர் “இவர்கள் இரண்டு நாளைக்குப் பூமண்டலத்தில் இருந்து வரட்டும், அவர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்கிறோம், என்று சில நித்யஸூரிகள், சொன்னாலும், அவர்களை அவ்விடத்திலிருந்து இந்த உலகத்திற்கு அனுப்ப வல்லார் யாருமில்லை என்கிறார். அதாவது கர்மம் அடியாக மீட்சி இல்லை என்பது ஆகும்.

வாய் படைத்த பயன், நமோ நாராயணா என்று சொல்லி, ‘எனக்கு நான் உரியேன் அல்லேன், உனக்கு உரியேன்’ என்று சொல்வது. தலை படைத்த பயன், முடிமேல் கைதூக்கி சொல்வது. இப்படி ஒரு முறை கை தொழ, பார்த்த இடம் எல்லாம் அஞ்சலி காடாக இருப்பது என்றும், ‘மற்று எல்லாம் கை தொழப்போய்‘ (பெரிய திருமொழி, 3.7.8) என்று எல்லோரும் கைக்கொண்டு சேவிக்கும்படியாக இருப்பது என்றும் சொல்கிறார்.

இவன் ஒருமுறை ஆத்ம சமர்ப்பணம் செய்ய, ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் ‘ (திருவாய்மொழி, 10.9.6) என்று ‘திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! இந்த ஸ்வர்க்காதி பதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி பிரியமுடன் வாழ்த்தப்படுவார்கள். ஒருமுறை நம என்று சொன்னால், கால தத்துவம் உள்ள வரைக்கும், நமோ நாராயணா என்று சூழ்ந்திருந்தேத்துவதே பலம்.

Leave a comment