ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி, * வாச வார் குழலாள் என்று மயங்கி மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே, * கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும், * பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசு வான் புகில் நம் பரமன்றே.
சென்ற பதிகத்தில், ஆதியான் அடியவர்களையும், அடிமையின்றி திரிவாரையும் என்று ஸம்ஸாரிகள் பொல்லாங்கும், ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் சொன்னார். ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பகவத் சம்பந்தம் ஒத்து இருக்க, ஸம்ஸாரிகளை ஆழ்வார் தவிர்க்க காரணம், அவர்களுக்கு பாகவத சம்பந்தம் பற்றிய அறிவு குறைந்து இருப்பதே என்கிறார். இறுதி காலத்தில் பாகவத சம்பந்தம் மிகவும் நல்லது என்பதால், இந்த பதிகத்தில் ஆழ்வார் ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 4.5.1
என் அம்மா, என் தந்தை, என் பிள்ளைகள், என் பூமி, பரிமளம் வீசும் மயிர் முடியை உடைய என் மனைவி என்று வாய்வெரும்படி ஆசையின் வழியே போன, மனதை உடையவராய், அவர்கள் பக்கம் மயங்கி, உயிர் விடும் போது, அவர்கள் பெயரை சொல்லி அழையாமல், ‘கேசவனே’ என்றும், ‘புருஷோத்தமனே’ என்றும், ‘வராகரூபம் கொண்டு தன்னை அழிய மாறியும், தன் ஸ்வரூபம் ஒன்றும் கேடாதவனே, என்றும் சொல்லுமவர்கள் பெரும் பேற்றை பேச ஆரம்பித்தால் நம்மால் பேசி முடிக்க முடியாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வீணாக பல நாட்கள் போக்கினாலும், இறுதி காலத்தில் அவர்கள் பெயர்களை சொல்லாமல், கேசவனே என்றும், புருஷோத்தமனே என்றும், வராகனே என்றும், அழிவில்லாத எம்பெருமானே என்றும், சொல்பவர்கள் மேல் உலகத்தில் பெரிய பெருமைகளை அடைவார்கள் என்றும், அவற்றை பேசி முடிக்க முடியாது என்றும் சொல்கிறார்.
அஹங்கார மமகாரங்களை வளரச் செய்ய காரணமான ஸம்ஸாரத்தில் அழுந்தியே வீணாக பல பகல்களைப் போக்கினாலும், உயிர் முடியும் போதாவது அந்த ஸம்ஸாரத்தில் நெஞ்சைச் செலுத்தாது எம்பெருமான் திருநாமங்களை வாய்விட்டுச் சொல்லும் அவர்கள் மேலுலகத்தில் பெறும் பரிசுகளைச் சொல்லி முடிக்க யாம் வல்லர் அல்ல என்கிறார். வாழ்நாள் முழுவதையும் பகவந் நாம ஸ்ங்கீர்த்ததங்களாலேயே போக்கினவர்கள் பெறும் பெருமையை எம்பெருமான் தானும் பேசி முடிக்க வல்லவன் அல்ல என்பது வெளிப்படை .
மாளு மெல்லைக் கண் என்பதற்கு ‘வைத்த நாள்வரை எல்லை குறுகி‘ (திருவாய்மொழி 3,3,10), அதாவது, தங்களுக்கு சங்கலபித்து வைத்த, ஆயுட்காலத்தின் எல்லையானது நெருங்கிய போது, என்று கொள்ளலாம்.
அவர்கள் பெயர்களை சொல்லாமல் கேசவா ‘கெடுமிடர் ஆயவெல்லாம் கேசவா‘ என்று சொல்வதால், மரண வேதனை போகும்.
புருஷோத்தம என்று சொல்வது ஔதார்யம் என்பதை குறிக்கும், அதாவது இஷ்ட பிரார்த்தி மற்றும் அநிஷ்ட நிவர்த்தி செய்து வைக்கும்.
கேழலாகிய கேடிலீ என்று சொன்னது, இவர்கள் கேடு போனால் நம் கேடு போயிற்று என்று நினத்து இருக்கை.
Leave a comment