கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர், * செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி உடைத் திருக்கோட்டியூர், * நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால், * எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவரென்று ஆசைகள் தீர்வனே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.9
கிளைகளாலே நெருங்கின சோலைகளிலே குயில்களின் கூட்டம், கோவிந்தனுடைய குணங்களை / சீர்மைகளை, பாடுவதும் சிறந்த செம்பொன்னாலே அமைந்த மதில்களால் சூழப்பட்டதும், செழுமை உடைய கழனிகளை உடையதுமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும், ரக்ஷகன் என்று எம்பெருமானை முற்றும் நம்புபவனும் நரஹிம்ஹரூபியுமான ஸர்வேச்வரனை, பாடி துதிக்கும் பாகவதர்களை, யான் சேவிக்கப் பெறுவேனாகில், இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள், எம்பெருமானுடைய அடையாளமாக இருப்பவர்கள், என்று பேசி / பாடி, நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை பெற்று கொள்வேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கொம்பினார் பொழில் என்பது பெரிய திருமொழியில் (3.6.8 )ல் கூறியபடி ‘குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தை” என்கிறார். கூட்டில் உள்ள கிளி ‘கோவிந்தா கோவிந்தா ‘ என்று பாடுவது சிலர் சொல்லிக் கொடுத்ததால் பாடுவதாகும், ஆனால் இவை தானாகவே பாடும் என்கிறார். அதே போல ‘நாரணன் வரக் கூவுவாயே’ என்றும் அப்படி கூவி அழைத்தால் ‘இன் அடிசிலோடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்வன் குயிலே ‘ (நாச்சியார் திருமொழி 5.5) என்றும் கைக்கூலி பெறுவதும் போன்றவை அல்ல என்றும் கூறுகிறார்.
செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி உடைத் திருக்கோட்டியூர், என்று சொன்னது உள்ளே சென்று ஊரை அனுபவிக்க வேண்டாம் என்றும் வெளியில் இருந்தே சோலைகளையும், குயில்கள் பாடுவதையும், சிவந்த போனால் அமைந்த மதிள்களையும், அழகிய கழனி கட்டளைகளையும் அனுபவிக்கலாம் என்கிறார்.
நம்பனை என்பது அடியவர்களிடம் விஸ்வாஸம் உடையவனை என்கிறது. அதற்கு ஏற்ற அவதாரம் நரசிம்ம அவதாரம். அதனை அடுத்து நரசிங்கனை என்று சொல்கிறார். ‘அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, என் சிங்கப்பிரான்‘ (திருவாய்மொழி 2.8.9) என்று சொல்லியபடி பிரகலாதனுக்கு எம்பெருமானின் காட்டிய விஸ்வாஸம்.
ஈஸ்வரனுக்கு வந்த மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளி செய்வார். பிரகலாதன், திரௌபதி, கஜேந்திரன் மூவருக்கும் வந்த ஆபத்தினை நீக்காமல் இருந்திருந்தால் அவனுடைய ஈஸ்வரத்திற்கு ஆபத்து வந்து இருக்கும் என்கிறார். தங்கள் இழப்பிற்கு வருந்தாமல் ஈஸ்வரனின் அருளுக்கு அன்றோ இவர்கள் வருந்துவது. இப்படிபட்ட நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் கண் பயன் ஆவது என்கிறார்.
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்‘ (திருவாய்மொழி 6.9.1) என்று இருப்பவர்கள் இவர்கள்; அவற்றோடு வராமல் போனால் போவாய் என்று சொல்பவர்கள். ‘அந்தாமத்தன்பு செய் தென்னாவி சேரம்மானுக்கு‘ (திருவாய்மொழி 2,5,1) என்று இவர்கள் ஆத்மாவில் பரமபதத்தில் பண்ணும் விருப்பத்தை செய்து வந்து பொருந்தியவன் என்று இருப்பவர்கள்.
ஆசைகள் தீர்வனே என்பது, காண்பது என்றும், அருகே என்றும், கூட இருக்க வேணும் என்றும் சொல்வதாகும். அவன் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால் அவனை காண வேணும் என்ற ஆசை தீரும் என்றும், ‘அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே‘ (பெருமாள் திருமொழி 1.10) என்பது போல ஸ்ரீ வைஷ்ணவர்களின் கூட்டங்களை கண்டால் கூட இருக்க வேண்டும் என்ற இழவு தீரும் என்றும் சொல்கிறார். ‘கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற் றார்க்கும்‘ (திருவிருத்தம், 10.6), என்று சொல்வது போல, கண் மூடி தூக்கம் வராது. அவர்களுக்கு ஈஸ்வரனைக் கண்டால் ஆசை தீராது என்றும், அடியவர்களை கண்டால் தான் ஆசை தீரும் என்றும் சொல்கிறார். ‘அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்ப தென்று கொல் கண்களே‘ (திருவாய்மொழி 3.6.10) என்று இவருடைய ஆசைகள் தீர்ந்தது அடுத்த பதிகமான பயிலும் சுடரொளியில் என்கிறார். ‘ திருநாவாய் அவையுள்புகலாவதோர் நாளறியேனே‘ (திருவாய்மொழி 9.8.3) என்று சொல்லி அந்த கூட்டத்தில் புகுவதே உத்ஸ்யம் என்று இருந்தார். ‘ ஓண விழவில் ஒலியதிர – பேணி வரு வேங்கடவா என் னுள்ளம் புகுந்தாய்’ (நான்முகன் திருவந்தாதி 5.1) என்று அவன் வரும் போது அவர்களும் மங்களாசாசனம் செய்து கொண்டு கூட வந்து புகுந்து விடுவார்கள் என்கிறார்.
Leave a comment