திவ்ய பிரபந்தம்

Home

4.4.8 நளிர்ந்த சீலன் நயா

பெரியாழ்வார் திருமொழி 4.4.8

குளிர்ந்த சீலத்தை உடையவராய் நீதி நெறி தவறாதவராய் பகவத் அனுபவத்தால் வந்த செருக்கில் உயர்ந்தவராய் நாள்தோறும் தெளிந்தவராய், கைங்கர்ய செல்வத்தை உடைய செல்வ நம்பியை அடிமை கொண்ட சிவந்த கண்களையும் பிராட்டி பக்கம் அதிக மோகத்தை உடைய எம்பெருமான் வாழ்கின்ற திருகோஷ்டியூரில் திருவுள்ளம் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனுடைய கல்யாண குணங்களை பாடுபவர்கள் எழுந்து அருளி இருக்கிற நாட்டிலே விளைந்த தானியங்களை கூட ராக்ஷ்சர்கள் அபகரிக்க மாட்டார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி என்றும், எம்பெருமான் சீலம் கொதிக்கும் என்றும் சொல்கிறார். ஏன் என்றால் ருத்திரன், மற்றும் சாவாமல் இருப்பதற்காக அமிர்தம் என்ற மருந்தினை உண்ணும் தேவர்கள், இவனுக்கு அங்கே சேவை செய்பவர்கள். மேலும் அவர்கள் இவன் உடம்பில் இருப்பது தேவாந்திரங்களும் அவர்களின் ஆட்டமும் ஆகும்.

திருவாய்மொழி (9.3.10)ல் ‘வாள்கொள் நீள் மழுவாளி உன்னாகத்தான்‘ என்றும் ‘ஆளராய்த் தொழுவாகும் அமரர்கள்‘ என்று சொன்னதும் இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் மூன்றாம் திருவந்தாதி (7.3)ல் சொல்லியபடி ‘தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்‘ என்று இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து தோன்றுவதாலும், திருவாய்மொழி (4.8.1)ல் சொல்லியபடி ‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளும் தனி உடம்பன்‘ என்று சொல்வதாலும் இவனுடைய உடம்பில் தேவதாந்திரங்களும், அவர்களின் ஆட்டமும் சொல்லப்பட்டது.

நய அசலன் என்று சொன்னது, நீதி குலைதல் இல்லாமல் இருப்பது அல்லது நீதி குறைவு இல்லாதவன், அமலானாதிபிரானில் சொன்ன ‘நீதி வானவன்” இங்கே சொல்லப்பட்டது. எம்பெருமானுடைய திருமேனியில் சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி, அங்கு குறைதல் இல்லாதது சொல்லப் படுகிறது. திருவாய்மொழி (4.9.10)ல் கூறியபடி ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே‘ என்று அவன் அடைவு பட்டு கிடப்பதும், அதாவது, தன் திருமாதுடனே தான் தனியரசாய் உறைகின்ற விருப்பை எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுத்தருளிய திருமேனி என்கிறார். இந்த இடத்தில் ‘யானே என்று எனதே‘ (திருவாய்மொழி 2.9.9) என்று அகங்காரங்க மமகாரங்கள் கேட்டு (இல்லாமல்) இருக்கும் என்கிறார். ஆனால் இவ்விடம் ‘விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை’ (திருவாய்மொழி 7.1.6) என்று ‘மயர்வ மதிநலம்’ அருளபட்ட ஆழ்வார்களையும் சந்தேகிக்க வைக்கும் ஆகும் என்கிறார்.

அபிமான துங்கனை என்று சொல்லும் போது, ‘என்னின் மிகுபுகழார் யாவரே‘ (பெரிய திருவந்தாதி 1.4) என்றும் எம்பெருமானைக் கைக்கொண்டவர்கள் “எனக்கு ஆவார் ஆர் ஒருவரே‘ (நான்முகன் திருவந்தாதி 6.1) என்றும், மாறுளதோ விம்மண்ணின் மிசையே, என்றும் ‘யாவர் இனிநிகர் அகல்வானத்தே‘ (திருவாய்மொழி 4.5.8) என்றும் ‘யான் பெரியன் நீ பெரியை என்பதனை யாரறிவார், ‘புவியும் இருவிசும்பும் நின் அகத்த, நீ யென் செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,‘ (பெரிய திருவந்தாதி 8.5) என்றும் ‘ சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும், தம் நெறியா வயிற்றிற் கொண்டு நின்றொழிந் தாரே‘ என்றும் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை யெனக் எதிரே, என்று பகவத் அனுபவத்தால் வந்த செருக்கும் கர்வமும் கொண்டார் என்கிறார்.

நளிர்ந்த சீலன் என்பது குணம் என்றும், நய அசலன் என்பது அனுஷ்டானம் என்றும் சொல்கிறார். அபிமான துங்கன் என்பது அதனால் வந்த செருக்கு என்றும் நாடொறும் தெளிந்த என்று வந்த விபரீத செருக்கு தெளிவாக உள்ளது சொல்கிறார். ‘கலக்க மில்லா நல்தவ முனிவர்‘ (திருவாய்மொழி 8.3.10), ‘தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு’ (திருவாய்மொழி 7.5.11) என்ற இந்த தெளிவு தான் குலையாது இருப்பதற்கு ஏற்றமாக இருப்பது என்கிறார்.

செல்வனை என்பதற்கு இவருக்கு மூன்று ஸ்ரீகளும் உண்டு என்கிறார்.

பெருமாள் (ஸ்ரீ ராமன்) ராஜ்யத்தை இழந்தார், லக்ஷ்மணன் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார். ‘சுற்றம் எல்லாம் பின் தொடர’  (பெருமாள் திருமொழி 8.6) என்று சொல்லி பாகவத சம்பந்தம் கொண்டு எல்லா அடிமைகளையும் பெற்றார் பாகவத கைங்கர்யம் செய்து முழுமை பெற்றது சொல்லப்பட்டது. பகவத் கைங்கர்யம் செய்வது தன் சத்தை பெறுவதற்கு என்றும், அந்த சத்தை அழிய பாகவத கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். விபீஷணன் பிராட்டியையும் பெருமாளையும் (ஸ்ரீராமன்) காணாமலே தன்னுடைய வீட்டை விட்டு புறப்பட்டது. விபிஷணனும் லக்ஷ்மணனும் வீட்டை விட்டு புறப்பட்ட பின்னரே ஸ்ரீமான்கள் ஆயினர் என்கிறார். விபீஷணன் இலங்கையில் இருந்த போதும் பிராட்டி இருந்தாலும் சகவாச தோஷத்தால் அவனுக்கு பிராட்டி சம்பந்தம் கிடைக்கவில்லை, இலங்கையை விட்டு வந்த பின்னரே ஸ்ரீமான் என்ற பட்டம் கிடைத்தது, கஜேந்தர ஆழ்வான் முதலை என்ற எதிரியை இல்லாமல், தன்னுடைய அகங்காரம் என்ற எதிரியை விட்ட பின்னரே ஸ்ரீமான் ஆயிற்று.

சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே (திருமாலை 35) என்று தொண்டரடிபொடியாழ்வார் சொல்வது போல இந்த ஆழ்வாரும் செங்கண்மால் என்கிறார்.

செங்கண்மால் என்று சொன்னது வாத்ஸல்யம் ; சேவகம் கொண்ட என்று சொன்னது சௌசீல்யம் ; கோவிந்தன் சென்று சொன்னது சௌலப்யம் ; அவதாரம் பரத்வம் என்பது போல இங்கு அர்ச்சாவதார சௌலப்யம். இந்த குணங்களை ஸ்னேகத்தோடு சொல்பவர்கள் இருக்கும் நாட்டினுள், அவர்கள் அல்ல, அவர்கள் சம்பந்தம் உள்ளவர்கள் அல்ல, அவர்கள் உள்ள ஊர் அளவு அல்ல, அவ்வூரோடு சேர்ந்த நாட்டில் விளைந்த தானியங்களை கூட ராக்ஷஸர் அபஹரிக்க வல்லவர் அல்லர். ஏன் என்றால் அவர்கள் தானியங்களை கொள்வது பகவத் பாகவத விஷயங்களுக்காக என்றும், அவர்கள் ‘புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க‘ (பெரியாழ்வார் திருமொழி 5.3.3) என்று இருக்கும் பாகவதர்கள் என்று திருகோஷ்டியூரின் சிறப்பு சொல்லி முடிக்கிறார்.

Leave a comment