குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து, * திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர், * கருந்தட முகில்வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் * இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத் தவங்கள் செய்தார் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 4.4.7
திருத்தமான நான்கு வேதங்களையும் நன்கு கற்று தேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒப்பற்ற குருந்த மரத்தை முறித்த கிருஷ்ணனுடன் சென்று கூடி அவன் குணங்களில் அனுபவித்து உற்சாகம் கொண்டவராய் இரவும் பகலும் துதித்துக் கொண்டு வாழ்கின்ற திருக்கோஷ்டியூரில் எழுந்தருளி இருக்கிற, கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போன்ற வடிவை உடையவனை தங்கள் தாழ்ச்சியை முன்னிட்டுக் கொண்டு கை தொழுது நின்று உள்ள பக்தர்கள் வசிக்கின்ற ஊரில் வாசம் செய்யும் மனிதர்கள் எப்படிப்பட்ட தவங்களை பண்ணினார்களோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருக்கோட்டியூர் எம்பெருமான் திருவடிகளில் அன்பு பூண்ட பாகவதர்கள் எழுந்தருளி இருக்கிற திவ்ய தேசத்தில் வாழ்வது அரிய பெரிய தவங்களினால் பெற வேண்டிய பேறு என்பதை வெளியிடுகிறார்.
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் என்று சொல்வது மனித ஜன்மத்தில் பிறந்ததின் பலன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கும் ஊரில் இருப்பது என்பதாகும். திருவிருத்தம் (8.9)ல் சொல்லியபடி, ‘சீதனையே தொழுவார், விண்ணுளாரிலும் சீரியரே‘ அவர்களைப் போல அவர்கள் வசிக்கும் தேசமும் கூறப்பட்டது, ஆகையால் அங்கு செல்வதும் வானவர் நாடு என்று சொல்லாம். இருந்த ஊரில் இருக்கும் மானிடர் என்று சொல்வதால் அங்குள்ள மனிதர்கள் முக்கியமல்ல, அந்த தேசமே முக்கியம் என்கிறார். ‘வைகுந்தமாகும் தம் ஊரெல்லாம்‘ என்று நம்மாழ்வார் திருவாய்மொழி (5.3.11)ல் சொல்வது போல தேசமே வைகுந்தம் ஆகும்.
எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் வாழ்வது என்பதற்காக ஒரு தவமே போதும் ; பாகவதர்க ளின் நகரத்தில் வாழ்வதற்கு பல தவங்கள் புரியவேண்டும் என்பது, எத்தவங்கள் என்ற பன்மையினால் விளங்கும்.
திருவிருத்தம் (4.3)ல் சுவாமி நம்மாழ்வார் ‘அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும், இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர் பெண்பால், பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்றெண்ணோ?’ சொல்வது போல அவன் நிழலில், அவன் காவலில் இருப்பதே தவம் என்கிறார். திருவிருத்தம் (4.8)ல் சொல்வது, ‘நீர் நிலை நின்ற தவமிது கொல்‘ என்பது பகவத் விஷயத்தை கிட்டுவதற்கு என்கிறார். பாகவத விஷயத்தை கிட்டுவதற்கு எத்தனை தவம் செய்ய வேண்டும் என்பது அறியவில்லை என்கிறார்.
‘ கண்ணன், யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலை எடுத்துக் கொண்டு, அதன் கரையிலுள்ள மலர்கள் நிறைந்து இருந்ததால் கண்ணன் விரும்பிய குருந்த மரத்தின் மேல் ஏறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும், கம்ஸனால் ஏவப்பட்டவனுமான ஒரு அஸுரன், கண்ணனை நலிவதற்காக அந்த குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்; அதை அறிந்த கண்ணன் அந்த மரத்தை முறித்துப் போட்டான் என்பது வரலாறு.
தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்ற வைணவ சம்பிரதாயத்தின் முக்கியமான கோட்பட்டை நைச்சானு சந்தானம் என்று கூறுவார்கள். கடைகொண்டு என்பது தன்னுடைய தாழ்வினை கொண்டு என்ற அர்த்தத்தில், அதை சொல்லி கொண்டு, “நீசனேன் நிறையொன்றுமிலேன்” (திருவாய்மொழி 3.3.4) என்று சொல்வதை போல நைச்சானுசந்தானத்தை சொல்வது ஆகும். நான்முகன் திருவந்தாதியில். “குறைகொண்டு நான்முகன்” (9) என்ற பாட்டில் “குறைகொண்டு” என்று சொன்னதும் இதே போல் ஆகும்.
Leave a comment