திவ்ய பிரபந்தம்

Home

4.4.6 பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து

பெரியாழ்வார் திருமொழி 4.4.6

இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களினால் ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லாதவர்களின் துயரங்களை சொன்னார். இப்போது ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றம் சொல்கிறார்.

பஞ்ச பூதமயமான உடம்பினாலும், பஞ்ச மகா யஜ்ஞங்களாலும், ஐந்து புலன்களினாலும், ஐம்பொறிகளாலும் குற்றம் ஒன்றும் இல்லாதவர்களாய், உதாரர்களுமாய் (உதவி செய்பவர்கள்) நித்ய வாசம் செய்கிற திருக்கொட்டியூர்க்கு நாதரான சொக்க நாராயணராயும், நரசிங்க பெருமாளாக எழுந்து அருளி இருக்கின்றவனை வாயாரச் சொல்லி துதிப்பவர்கள் நடமாடுகின்ற திருவடித்தூள்கள் படுதலால் இந்த லோகமானது நல்ல பாக்கியத்தைப் பண்ணியது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் புண்ணார் ஆக்கை தன்னுள்‘ (பெரிய திருமொழி 1.9.6) என்று பஞ்ச பூதங்கள் சேர்ந்த இந்த உடலை திருமங்கை ஆழ்வாரும் சொல்கிறார்.

ஒரு வகைக் குற்றமும் தம்மிடத்து இல்லாத பரம அடியவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும் இடமான திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் பக்கம் அன்பு பூண்ட பாகவதர்கள் பலர் இவ்வுலகத்தில் உலாவுவதால், அவர்களுடைய ஸ்ரீபாத தூளியை பெற்ற இவ்வுலகம் மிகப் பெரிய பாக்கியம் பண்ணியது என்கிறார்.

  • நிலம், நீர், தீ. காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதமயமாகிய சரீரத்தை பூதமைந்து என்கிறார்.
  • வேள்வி ஐந்து என்பன, தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், பூத யஜ்ஞம், மனுஷ யஜ்ஞம், ப்ரம்ஹ யஜ்ஞம் என்பவை ஆகும்.
  • சப்தம், கந்தம், ரூபம், ரசம், தொடு உணர்ச்சி என்பதை பொறிகள் ஐந்து ஆகும். இவனை கொண்டுபோய் விழவிட்டு, முடித்து விடுவதால் இவைகளை பொறி என்று சொல்கிறார்.
  • செவி, வாய், கண், மூக்கு, உடல் என்பது புலன் ஐந்து ஆகும். ஐம் புலன்கள் என்று சொன்னதற்கு , பஞ்ச இந்திரியங்கள் என்று பொருள் உரைத்தலும் தகும். புலன்கள் என்று சொன்னது, புலப்படும் விஷயங்களை சொல்கிறது.

ஏதம் என்றால் குற்றம். உடல் தன்னது என்று இருப்பது குற்றம். ஈஸ்வரனுக்கு என்று இருப்பது ஏதம் இல்லாமல் இருப்பது. பாகவதர்களுக்கு என்று இருப்பது ஏதம் ஒன்றும் இல்லாமல் இருப்பது. சப்த ஸ்பரிச ரூப ரஸ கந்தங்கள் தனக்கு என்று இருப்பது ஏதம். ஈஸ்வரனுக்கும் பாகவதர்களுக்கும் என்று இருப்பது ஏதம் ஒன்றும் இல்லாமல் இருப்பது.

வண்கையினார்கள் என்று உதவும் கரங்கள் கொண்டவர்களை சொல்கிறார். ‘பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி‘ (பெரியாழ்வார் திருமொழி 4.4.5 ) என்று சொன்ன ஆழ்வார் அவற்றை கெடாதபடி வாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கொடுப்பதைச் சொல்கிறார். திருமங்கை ஆழ்வார் ஈஸ்வரனிடம் இருந்து பறித்து பாகவத கைங்கர்யம் செய்ததால் ஈஸ்வரன் திருமந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்வித்ததையும் இங்கே குறிப்பிடுகிறார்.

இங்கு நரசிம்மனை குறிப்பது, திருநாமங்களை வாயால் சொல்லக்கூடாது என்று சொன்ன இரணியனின் மார்பினை கீறியதைச் சொல்கிறார். , ‘வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக ஏத்தி யிருப்பாரை‘ (நான்முகன் திருவந்தாதி 2.8) என்று சொல்லப்பட்டது.

நினைப்பிலாவலி நெஞ்சுடை பூமிபாரங்கள் ‘ (பெரியாழ்வார் திருமொழி 4.4.5) என்று இவ்வுலகம் பற்றி சொல்கிறார்.

திருஉலக அளந்த திருவடிக்களின் துகள் பட்டதன்று பாக்கியம், ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருவடிகள் துகள் பட்டதே பாக்கியம் என்கிறார்.

பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும், பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும், சப்தம் முதலிய ஐந்து விஷயங்களினாலும், பஞ்ச இந்திரியங்களினாலும், சம்பவிக்க கூடிய குற்றம் ஒன்றும் இல்லாதவர்களும் உதாரமான கைகளை உடையவர்கள், வாழ்விடமான திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருப்பவனும், எங்களுக்கு ஸ்வாமி ஆனவனும், நரஸிம்ம ஸ்வரூபியுமான எம்பெருமானை துதிக்கின்ற பாகவதர்களின் திருவடிகளினால் மிதித்து அருளின தூளினுடைய, சம்பந்தத்தினால் இந்த உலகம் பாக்கியம் பண்ணியதாக சொல்கிறார்.

Leave a comment