காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு, * தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர், * கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று * பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.10
ஒரு காசுக்கு ஒரு பிடி நெல் என்று விற்கும்படியான கஷ்ட காலங்களிலும், தாம் தேடின பொருள்களை மறைத்து வைக்காமல், பிரதி உபகாரம் என்று (தம்மை தேடி வந்த விருந்தினருக்குச்) சோற்றை இட்டு அதனாலே புகழைப் பெற்றவர்களாய், உபகாரம் செய்பவர்களாய் வாழ்கின்ற திருக்கோஷ்டியூரில், கேசவனே, புருஷோத்தமனே, மிகுந்த தேஜஸ் உடையவனே, வாமன வேஷம் பூண்டவனே, என்று இப்படி பேசுபவர்களுக்கு அடியார்கள் எங்களை வேண்டினபடி விற்றுக் கொள்ளத் தக்க அதிகாரமும் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தம் வயிற்றைத் தாம் நிறைத்துக் கொள்வதே அரிது, தம் வயிற்றைப் பட்டினி கொண்டு பிறர் வயிற்றை நிறைப்பது என்றால் ஏதேனும் ஒரு பிரதி உபகாரத்தை எதிர்பார்க்க வேண்டும். இது உலகத்தில் சாதாரண மனிதனின் இயல்பு. திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படிபட்டவர் என்றால், துன்பம் அதிகம் இருந்து, சாவு வாய்க்காமல் இருக்கும் காலத்திலும், கைம்மாறு கருதாமல் அதிதிகளுக்கு (விருந்தாளிகளுக்கு) அன்னதானம் செய்து நாடெங்கும் புகழ் பெற்று இருப்பார்களாம்.
அப்படிப்பட்ட மஹாநுபாவர்கள் வாழும் இடத்துள்ள எம்பெருமானது திருநாமங்களை அநுஸந்திக்குமவர்கள் அடியேனைத் தங்கள் இஷ்டப்படி உபயோகப் படுத்திக் கொள்ளுமாறு யான் உடன்பட்டிருக்கத் தடையில்லை என்று தம்முடைய பாகவத பக்தியின் எல்லையற்ற அன்பையும் அவர்களுக்கு சேவை செய்கின்ற மனோபாவத்தையும் அருளிச் செய்கிறார்.
திருக்கோட்டியூர் எம்பெருமானை, கேசவா, புருஷோத்தமா, வாமனா என்று எம்பெருமானின் திருநாமங்களை எப்போதும் உச்சரிக்கும் அடியார்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
Leave a comment