திவ்ய பிரபந்தம்

Home

4.4.5 ஆமையின் முதுகத்திடைக்

பெரியாழ்வார் திருமொழி 4.4.5

பருவத்தால் இளைய வாளை என்ற மீன்கள் ஆமையின் முதுகிலே சென்று குதித்தும் தூயதான (அருகே மலர்ந்து கிடக்கிற ) தாமரை முதலிய மலர்களை உழக்கிக் கொண்டும் போய் தேவையற்ற உயிர்இனங்களை கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்தும் விளையாடும் நீர் வளப்பத்தை உடைய திருக்கோட்டியூரில் ; திரு ஆழியொடு சேர்ந்து இருக்கின்ற பெரியதான திருக்கையை உடையவனை ஒருக்காலும் நினைக்காத வலிய நெஞ்சை உடையவராய் பூமியில் இருக்கும் பாவிகளானவர்கள் உண்கிற சோற்றை பிடுங்கி அறிவிலிகளான பசுக்கள் தின்கிற புல்லைக் கொண்டு (அவர்கள் வயிறை) நிரப்பி விடுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நேமி சேர் தடங்கையன் என்பது எப்போதும் விடாது சேர்ந்து இருக்கும் ஆழியான் என்றும், ‘கை கழலா நேமியான் நம் மேல் வினைகடிவான்‘ (பெரிய திருவந்தாதி 87) என்பது போல அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் ஆழியான் இருப்பவன் என்கிறார்.

ஆமையின் முதுகில் விளையாடும் வாளை மீன்கள் நீர்நிலைகள் உள்ள திருக்கோட்டியூரில் உறையும் சக்கரக்கையானை நினைக்காதவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.

உலகத்தில் அறிவுடையார் சோற்றை உண்ணவேணும், அறிவிலிகள் புல் முதலிவற்றை உட்கொள்ளவேணும் என்பது விவாதமற்ற விஷயம். திருக்கோட்டியூர் எம்பெருமானை நெஞ்சாலும் நினையாத மனிதர் அறிவற்றவர்கள், ஆதலால் அவர்கள் புல்லைத்தான் தின்ன வேண்டும், அப்படி இல்லாமல், அவர்கள் முறை தப்பி உண்ணும் சோற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அவர்கள் வயிற்றில் புல்லையிட்டு நிறையுங்கள் என்கிறார். 

தொண்டரடிபொடியாழ்வார் திருமாலை என்னும் பிரபந்தத்தில் (23) ‘மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே‘ என்று சொல்கிறார். இப்படி இவர்கள் இடுமின், திணிமின் என்று சக்தி உடைய மக்களை பார்த்து சொல்வது அவர்கள் இதைக் கேட்டாவது எம்பெருமானின் விஷயத்தில் நெஞ்சை செலுத்துவார்களோ என்ற ஒரு ஆசையினால் என்று சொல்லி முடிக்கிறார்.

Leave a comment