உரகம் மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள், * நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர், * நரகம் நாசனை நாவிற் கொண்டு அழையாத மானிட சாதியர், பருகு நீரும், * உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 4.4.4
திருவனந்தாழ்வானை மிருதுவான படுக்கையாக உடையவனுடைய, (‘கைவண்ணம் தாமரை ‘ – திருநெடுந்தாண்டகம் 21 என்பது போல இருக்கும் எம்பெருமானின்) திருக்கையில் உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்னியம் போல், வெண்மையாய் மடப்பத்தை உடைய அன்னங்கள், ஒழுங்குபட திரள வந்து பரவி ஏறி வசிக்கின்ற, செந்தாமரை மலர்களை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருக்கோட்டியூர் ஊரிலே, நரகத்தை நசிக்கும் நாவாலே சொல்லாமல், பெறுவதற்கரிய மனித ஜன்மத்தில் பிறந்தவர்கள் குடிக்கிற தண்ணீரும் உடுக்கிற வஸ்திரமும் பாவம் செய்தனவோ தான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குளிர்ச்சியான மற்றும் ஆறுதலான குணத்தை உடையவன், எளிமையான குணம் கொண்டவன் என்று திருவனந்தாழ்வானை சொல்கிறார். இந்த திருப்படுக்கை அதில் சயனித்து இருக்கும் எம்பெருமானின், ‘அடியவர்கள் தம்மைப் பிரிந்து செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத’ திருக்குணமான மார்த்வம் குணம் கொண்டு இருப்பதையும் குறிப்பிடுகிறார்.
செந்தாமரை மலர்களில் வெளுத்த அன்னப்பறவைகள் இருப்பது எம்பெருமான் திருக்கையில் பாஞ்சசன்னியம் இருப்பது போல் என்கிறார். அன்னங்கள் தாமரை மேல் இருப்பது, பார்ப்பவர்களுக்கு திருக்கையும் பாஞ்சஜன்யம் சேர்ந்து இருப்பது போல தோன்றும். ஆண்டாளும் நாச்சியார் திருமொழி (7.7)ல், ‘செங்கமல நாண் மலர் மேல் தேனுகரும் அன்னம் போல்’ சொன்னது இங்கே குறிப்பிடலாம்.
நாமம், ரூபம் என்ற இரண்டையும் உடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் இருக்கின்றான் என்பதை சொல்ல பல ஆதாரங்கள் உள்ளன என்கிறார். இவற்றை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் நமது கருமங்களால் நம்மிடம் பிறந்துள்ள ஞானச்சுருக்கமே ஆகும் என்கிறார். ஆகையால், “பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதான் கொலோ” என்பது பொருந்தும்.
உலகத்தில் ஒருவன் செய்கின்ற பாவங்களே, அவன் நன்மை இழந்து தீமையையே பெறுவதற்கு காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. திருக்கோட்டியூர் எம்பெருமானை சொல்லாது பாவம் செய்தவர்கள் பயன்படுத்தும் பருகும் நீரும் உடுக்கும் வஸ்திரங்களும் பாவம் செய்தனவோ தான் என்கிறார்.
Leave a comment