திவ்ய பிரபந்தம்

Home

4.4.3 வண்ண நல்மணியும்

பெரியாழ்வார் திருமொழி 4.4.3

நல்ல நிறத்தை உடைய மாணிக்கங்களையும் மரகதங்களையும் ஒழுங்குபட அழுத்தினதினால் ஒளி விடுகின்ற திண்ணைகளால் சூழப்பட்ட திருக்கோட்டியூரில் எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியாரின் பதியின் திருநாமங்களை எண்ணுகைக்காக படைக்கப்பட்ட வீரல்களால் சிறிது நேரமும் எண்ணாமல் புறம்பே போய் உடமை வளர்ப்பதற்காக தங்களுடைய அசுத்தமான வாயில் சோற்று திரள்களை தள்ளுகின்றார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திண்ணைகள் இருப்பது எம்பெருமான் திரு விதியில் எழுந்தருளும் போது, அலங்காரமாக, ‘திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும் ‘ (பெரிய திருமொழி 7.8.9) என்று சொல்வதைபோல உள்ளது. ‘யானே நீ என் உடைமையும் நீயே‘ (திருவாய்மொழி 2.9.9) என்று சொல்லுவது போல இவர்கள் தம் தம் இல்லத்தை அலங்கரித்து இருப்பதும், சுய நன்மைக்காக அல்ல என்பதற்காக என்கிறார்.

பிராட்டியும் எம்பெருமானும், இருவரும் சேர்த்தியில் இருக்கும் ரசம் அறிந்து திருமால் அவன் திரு நாமங்கள் என்று சொல்கிறார். ‘எனக்கென்றும் தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம்‘ (பெரிய திருமொழி, 6.10.6) என்று சொல்பவர்கள் ஆயிற்றே என்கிறார்.

ஓராயிரமாய் உலகேழளிக்கும் பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்‘ என்பதால் திருநாமங்களை எண்ணுவது தேவை ஆகிறது.

உலகத்தில் மனிதர்களுக்கு கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே உபயோகப்படுத்துவதற்காகவே ஆகும். அதற்கு ஏற்றார் போல் கை விரல்களால் திருகோட்டியூர் எம்பெருமானுடைய திருநாமங்களை எண்ணுவதற்காகவும், வாயினால் அவற்றைச் சொல்வதற்காகவும் என்று சொல்கிறார். இப்படி இருக்க சில பாவிகள் அப்படிப்பட்ட காரியங்களில் அந்த கரணங்களைச் செலுத்தாது, வாயினால் உண்ண வேண்டியது என்றும், கை விரல்களினால் சோற்று கவளங்களை எடுத்து, வாயினுள் விழுங்க வேண்டும் என்று தமக்காகவே பயன்படுத்தி கொள்வதுமான கொடுமையான காரியங்களை செய்கிறார்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

Leave a comment