குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய், * செற்றம் ஓன்றுமிலாத வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர், * துற்றி ஏழுலகு உண்ட தூமணி வண்ணன் தன்னைத் தொழாதவர், * பெற்ற தாயார் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந்தார்களே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.2
ஒரு வகைப்பட்ட அபராதம் இல்லாமல் சாம தாமத திருகுணங்களை வர்த்தி செய்து தம் தம் ஆசார்யர்களுக்கு அனுகூலர்களாய் அல்பமேனும் அசூயை இல்லாதவர்களுமாய் உபகாரம் செய்யும் கைகளை உடையவர்களாய் நித்ய வாசம் செய்கின்ற திருக்கோட்டியூரில்; சப்த லோகங்களையும் பிரளயம் கொள்ளாதபடி திரண்டு பிடித்து அமுது செய்து அருளின பழிப்பற்ற நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனை தலை வணங்கி ஏத்தாதவர்கள் தங்களைப் பெற்ற தாய்மாரின் வயிற்றை மிகவும் நோவு படுத்துகைக்காக பிறந்தார்கள் அத்தனை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உலகத்தில் பிறந்த பிள்ளைகள் திருக்கோட்டியூர் எம்பெருமானை வணங்கினால் தான், அவர்களைப் பெற்ற தாய்மார் பேறு பெற்றவர்கள் ஆனார்கள். இல்லாவிடில், இப்பிள்ளைகளால் அந்தத் தாய்மார்களுக்கு ஒருவகைப் பயனுமில்லாமல், பிரஸவ காலத்தில்பட்ட வேதனையே பெற்றவர்கள் ஆவார்கள் என்கிறார். இதே ஆழ்வார் பெரியாழ்வார் திருமொழியில் (2.8.5) ‘நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே‘ என்றும், நாச்சியார் திருமொழி 11.1 ல் ‘நல்லார்கள் வாழும் நளிரரங்கம் ‘ என்றும் 8.9 ல் ‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்‘ என்றும் சொல்லும்படியாக இருப்பவர்கள் வாழும் இடம் திருக்கோட்டியூர் என்கிறார்.
ஒருவகையான குற்றமும் இல்லாமல் குணங்களை வளர்த்துக்கொண்டு, ஆச்சார்யார்களுக்கு தொண்டு செய்து, பொறாமை சிறிதும் இல்லாமல், உதவும் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும் திருக்கோட்டியூரில் எழுந்தருளி ஏழு உலகங்களையும் உண்டு நீல மணி நிறத்த வண்ணான எம்பெருமானை வணங்காதவர் பெற்ற தாயின் வயிற்றை மிகவும் கொடுமை படுத்துவதற்காக, பிறந்தார்கள் என்கிறார்.
Leave a comment