நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந்தோம்புவார், * தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர், * மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் * பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ.
கீழ் இரண்டு பதிகங்களில், திருமாலிருஞ்சோலை எம்பெருமானை, இராம, கிருஷ்ண அவதார குண நலங்கள் பிரகாசிக்கும்படி ஆழ்வார் அனுபவித்தார். எம்பெருமானையும் தென்திருமலையையும் பாடிய போது,
- எம்பெருமானின் திருநாமங்களை சொல்லியதற்காக, தந்தை இரண்யகசிபுவிடம் கொடிய தண்டனைகள் பெற்ற, பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன், (பெரிய திருமொழி 2.3.1), பிரகலாதனை காப்பாற்றி இரணியனை அழிக்கும் பொருட்டு, அடுத்த ஒரு உருவாய்,(திருவாய்மொழி 8.1.3), இரண்டு வடிவுகளை சேர்த்துக் கொண்டு தோன்றிய எம்பெருமானின் மகா குணம் பிரகாசிக்கும் வண்ணம் திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருப்பதையும்,
- திருப்பல்லாண்டு மற்றும் வண்ண மாடத்திலும் (பெரியாழ்வார் திருமொழி (1.2) சொல்லப்பட்ட செல்வநம்பியின் சம்பந்ததையும் திருவுள்ளத்தில் கொண்டு அவன் உகந்து அருளிய அந்த திவ்ய தேசத்தை இந்த பதிகத்தில் அனுபவிக்கிறார்.
- அவன் கொடுத்தருளிய மூன்று வித கரணங்களை கொண்டு, ‘திரி தந்தாகிலும்‘ (கண்ணி நுண் சிறு தாம்பு, 3) என்று அவனை அனுபவிப்பவர்களை, ‘ஒழிவில் காலமெல்லாம்’ (திருவாய்மொழி 3.3)ல் சொன்னபடி அவனுக்கு அடிமை செய்து, ‘புகழு நல் ஒருவன்‘ (திருவாய்மொழி 3.4.1)ல் சொன்னபடி வார்த்தைகளால் பாடி, ‘செய்ய தாமரைக் கண்ணனில்‘ (திருவாய்மொழி 3,6)ல் சொன்னது போல பகவத் ஞானத்தை உபதேசித்து, பயிலும் சுடரொளி (திருவாய்மொழி 3.7)ல் சொல்லியபடி பலகாலம் திருந்திய ஸ்ரீ வைஷ்ணவர்களை உகந்து, உயர்வாக பாராட்டியும்,
- அப்படி செய்யாமல் அவனோடு ஒரு சம்பந்தமும் இல்லை என்று திரிபவர்களை ‘எண்ணாதே யிருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே’ (பெரிய திருமொழி 2.6.1), மற்றும் ‘மொய்ம்மாம் பூம்பொழில் (பெரிய திருமொழி 3.5.1)ல் சொல்லியது போல நிந்தித்தும் இந்த பதிகத்தில் பெரியாழ்வார் பாடுகிறார்.
திருமங்கை ஆழ்வாரும் திருமாலிருஞ்சோலை பதிகத்திற்கு பிறகு திருகோஷ்டியூர் எம்பெருமானை பாடிஉள்ளார். பெரிய திருமடலிலும் ‘மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, கொன்னவிலும் ஆழிப் படையானை, கோட்டியூர், அன்னவுருவில் அரியை,’ என்று திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு அடுத்து திருகோஷ்டியூர் எம்பெருமானை பாடி உள்ளார்.
பெரிய திருமொழியில் (4.9.5) , ‘அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே’ சொன்னது போல உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் வசிக்கும் இடம் என்றும், பெரிய திருமொழி (2.6.2)ல் ‘ஆரெண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே’ என்று சொன்னது போல உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசிக்கும் இடம் என்கிறார்.
கொங்கு என்று குருபரம்பரை விஷயத்தில் ஒரு பிரசித்த ஊர். அந்த ஊருக்கு திருக்குருகை பிரான் எழுந்து அருளிய போது, பிறந்த ஒரு வார்த்தை; அனந்தாழ்வான் இறுதி காலத்தில் ‘பட்டர் உகக்கும் திருநாமம் எது’ என்று கேட்க, ‘நம்பெருமாள், ஸ்ரீ ரங்கராஜர் என்பவை தன் கணவரின் திருநாமங்கள் ஆனதால் அவற்றை சொல்லாமல் அசாதாரணமான அழகிய மணவாளப் பெருமாள்‘ என்று சொல்லி அதே சமயம் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்பது வரலாறு.
பெரியாழ்வார் திருமொழி 4.4.1
நாவால் சொல்ல ஒண்ணாத, சத்தியம் இல்லாத விஷயங்களை, ஒரு நாளும் சொல்லி அறியாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் (அங்கே நித்ய வாசம் பண்ணுபவர்களை), அன்று அமுது செய்ய எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போல நாள் தோறும் ஆதரித்துக் கொண்டு இருப்பவராய் பகவத் காரியங்கள் செய்து கொண்டும், வேதப் பிரதி பாத்யனான பரம புருஷனை நெருங்க அனுசந்தித்துக் கொண்டும் கண்ணாலே கண்டு அனுபவிப்பவர்கள் நித்ய வாசம் செய்கின்ற திருக்கோட்டியூரில் பிரம்மா, சிவன் இந்திரன் என்ற மூவர்க்கும், செய்த மூன்று காரியங்களையும் செய்து அருளின சர்வ காரண பூதனை, சிந்திக்காத அப்படிப்பட்ட பாவம் செய்தவர்களை படைத்தவன் என்ன பயனுக்காகப் படைத்தானோ (என்று மனம் தளர்ந்து பேசுவது) இந்த பாடலின் பொழிப்புரை.
பொய் பேசுகை, பிறரை சலனப் படுத்த புகழுதல் போன்ற சொற்களை சொல்லுதல் நாக்கு செய்ய கூடாத காரியங்கள். அப்படி இல்லாத திருநாமங்கள் சொல்லி இளைப்பாற வேண்டும் என்கிறார். நாவகாரியம் என்பது பொய் பேசுதல் முதலிய காரியங்கள் செய்யும் வாயால் பகவத் விஷயத்தை பேசுதல் என்கிறார். ‘ஆவியை அரங்கமாலை‘ என்றும், ‘எச்சில் வாயால்‘ என்றும், ‘தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்‘ என்றும் ‘பாவியேன் பிழைத்தவாறு‘ என்றும் தொண்டரடிபொழிஆழ்வார் சொல்லியபடி அயோக்கியன் திருநாமம் சொல்லுகையும் பாவபலம் என்கிறார்.
உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும் விருந்தாளிகளையும் ஆதரிப்பவரும், பகவத் ஆராதனம், வேதம் படிப்பது முதலிய நல்ல கர்மங்கள் செய்து கொண்டு வாழ்பவர்களாகிய பரமபாகவதர்கள் வாழும் இடமாகிய திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருக்கும், எம்பெருமானை அணுகாத பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ, அறியோம் என்கிறார்.
தேவகாரியம் என்பது திருவிளக்கெரிக்கை, திருமாலை எழுந்தருள செய்வது முதலியன என்று கொள்ளலாம்.
எம்பெருமான் செய்து அருளிய மூவர் காரியமாவது,
- மது கைடபர்கள் கையில் பறி கொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரியம்,
- குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கி அருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்;
- மஹாபலி போல்வார் கையில் பறி கொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம்.
திருத்துகை என்பது ஒழுங்கு படச் செய்கை.
Leave a comment