கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து * மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை * ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று * ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.9
பெருகி வரும் போது வாரிக்கொண்டு வருகிற பலவகைப்பட்ட பொன், முத்து, அகில முதலிய பொருள்கள் எல்லாம் எமக்கு ஸ்வாமியானவனுக்கு ஸ்ரீ பாதகாணிக்கை என்று ஓடிவருவதாய் குளிர்ந்து இருந்துள்ள திருச்சிலம்பாற்றை உடைய திருமாலருஞ்சோலை அதே : ஹிரண்யாக்ஷனாலே தள்ளப்பட்டு பிரளயங்கள் கதையான பூமியை, அண்ட பித்தியில் நின்று பிரித்து விடுவித்து எடுத்து, தன் திரு எயிற்றிலே (வராக ரூபியாய்க் கொண்டு) தரித்ததும், மஹாபலியாலே தனத்தாக்கிக் கொள்ளப் பட்ட பூமியை உள்ளங்கையில் நீர் ஏற்றுக் கொண்டு அளந்தும் மறுபடியும் அந்த பூமியை தம் திரு வயிற்றின் உள்ளே வைத்து நோக்கியும் (பின்பு) வெளிநாடு காண உமிழ்ந்தும் விளையாடும் நிர்மலனானவன் வசிக்கின்ற திருமலையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக்கொண்டு போகப்பட்ட பூமியை, வராகப் பெருமாள் ஆக உருவெடுத்து இடர்ந்ததும், பின்பு பிரளயத்தின் போது, இந்த உலகத்தினை, ‘பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி‘ (பெரிய திருமொழி 11.6.6) என்றபடி, தன் திருவயிற்றில் வைத்து காத்ததும், பிரளயம் முடிந்தவுடன் மீண்டும் படைத்ததும், மஹாபலியால் கவரப்பட்ட பூமியை வாமன ரூபத்துடன், ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ (மூன்றாம் திருவந்தாதி 7.2) என்றபடி, நீர் வாங்கி உலகை அளந்து மீட்டதையும், இப்படிபட்ட செயல்களால் விளையாடும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருமாலருஞ்சோலை ஆகும்.
Leave a comment