எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய, * வரிசிலை வாயில் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த, * அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று, * திரிசுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.8
தேவர்களோடு அவர்களுக்கு பிரபுவான இந்தரனும் இரவும் பகலும் சஞ்சரிக்கும் சந்திர சூரியர்களும் வந்து பிரதக்ஷிணம் பண்ணுகின்ற மலையாய் (இருப்பது) திருமாலரிருஞ்சோலை அதே ; நெருப்பை சிதறும் பாணத்தாலே லங்கையின் ராவணனை தன்னுடைய நீண்டு இருந்துள்ள ஸ்ரீசாரங்கத்தின் வாயிலே புகக் செய்து (அவனுடைய) வாக்கின் அநீதியை நீக்கி திருவுள்ளம் உகந்த அரசனானவன் பொருந்தி வசிக்கின்ற திருமலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இலங்கையினை என்றது அதிலுள்ள இராவணனையும் மற்ற அரக்கர்களையும் சேர்த்துக் காட்டும். “இலங்கையனை” என்றும் சொல்வதுண்டு. பார்வை இல்லாதவன் கூட செல்ல அஞ்சும் இலங்கை என்கிறார். இதில் இந்திரனும் சூரிய சந்திரர்களும் அடக்கம். வரம் கொடுத்த பிரம்மாதிகளும் இவ்வூரின் பெயர் கேட்டால் குடல்கருகும் படி இருப்பதை சொல்கிறார். ஆதித்யனும் இவ்வூரில் தன் கிரணங்களை வேண்டும் அளவு மட்டுமே பிரகாசித்து, நடுங்கி கொண்டு இருக்கிறான் என்கிறார். இப்படி இருக்கிற ஊரில், மனித உருவில் வந்து நின்று சாரங்கத்தாலே அழித்ததை சொல்கிறார்.
வரிசிலை என்று சொல்வது, நெருப்பைச் சொரிகிற அம்புகளை தொடுக்கும் வில் என்றதாகும். அம்பானது தைக்கும் போது உடம்பில் நெருப்பைச் சொரிந்து கொண்டு தைப்பது ஆகும். வில்லுக்கு வாய் அம்பு, அவனது அழகுக்கு ஆபரணமாக இருக்கும் ஸ்ரீ சாரங்கத்தில் வாயில் செலுத்துவது என்பது சர்ப்பம் (நாகம்) நாவாலே விழுங்குமாறு இருக்கிறது என்கிறார்.
கோட்டம் என்பது ‘ஒருவரையும் நான் வணங்கேன்’ என்ற ராவணனுடைய சொல், அவனது வாய்க்கோணலைச் சொல்லுகிறது.
இந்திரன், சந்திரன், ஸூர்யன் முதலிய தேவர்களனைவரும் வந்து பிரதக்ஷிணம் அல்லது சுற்றி வரும் படி பண்ணும் பெருமையையுடைய மலை இந்த திருமாலருஞ்சோலை என்பது, பின்னடிகளின் கருத்து.
Leave a comment