கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள், * இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்பிராமன் மலை, * கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம், * இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலை அதே
பெரியாழ்வார் திருமொழி 4.3.7
பொன்னை கொழித்துக் கொண்டு வருகின்ற தெளிந்த அருவியிலே அகன்ற பூமியில் உள்ள எல்லோரும் வந்து சூழ்ந்து கொண்டு திரள் திரளாக நீராடும் திருமலையாய் எல்லா நன்மைகளும் வாய்ந்த திருமாலிருஞ்சோலை அதே – பொன்னால் செய்யப்பட்ட காதணியை உடைய பிராட்டிக்காக திருச்சரங்களை பரப்பி பார்த்துக் கொண்டு ராக்ஷச குலத்தை அம்புகளாகிற சூழலத்திலே ஏறும்படி பண்ணின வீர ஸ்ரீயால் வந்த அழகு மிக்கு இருக்கிற தோளை உடைய எமக்கெல்லாம் உபகாரகனான ஸ்ரீ ராமன் வசிக்கின்ற திருமலையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
காதும் காதுப்பணியும் சேர்ந்து இருப்பது போல எப்போதும் எம்பெருமானை பிரியாது இருக்கும் பிராட்டியை அனுகூலர் காண பிரியப்படுவது என்பது பொன்னால் செய்யப்பட்ட காது பணி உடையவள் என்கிறார்.
கணை பாரித்து என்று சொல்வது, பிராட்டியை பிரிந்த நாளில் இருந்து, நினத்த போது எல்லாம், பிரித்தவர்களை எண்ணி எண்ணி கறுவுதலாலே, திருச்சரங்களை தெரிந்து பரப்பி பாரித்துக் கொண்டு இருந்ததை குறிக்கிறது. அது மட்டும் இன்றி, யுத்த காலத்தில் வாளியொழிந்த என்கிறபடி பாணங்களை யுத்த பூமி எங்கும் பரப்பினதை சொல்கிறார்.
கழுவேற்றுவித்த எழில் தோள் என்று சொன்னது, ராக்ஷஸர்களின் கூட்டத்தினை கூர் வாய் அம்புகளைக் கொண்டு கழுவு ஏற்றின உடலை பிளந்ததால் கழு என்று அம்புகளை சொல்கிறார். வீர ஸ்ரீயால் வந்த அழகினை உடைய தோள்கள் கொண்டவன் என்கிறார். பிராட்டிக்கு உதவுவதால் அவளுடைய பிரஜைக்களான நமக்கு உபகாரனாய், அழகாலும் குணத்தாலும் எல்லோரையும், ரமிக்க வைப்பதால் ராமன் என்ற திரு நாமத்தை உடையவன் என்கிறார். அவன் அவதாரத்திற்கு பிற்பாடு உள்ளவருக்கு உதவுவதற்காக எழுந்தருளி உள்ள மலை என்கிறார்.
இராமன், பிராட்டியை இலங்கையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்காக, இராவணன் முதலிய இராக்ஷஸர்களின் மேல் அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்ததை முதல் இரண்டு வரிகளில் கூறுகிறார்.
பிராட்டியின் முன்பு இருந்த நிலையை கனம் குழையாள் என்கிறார். கழுவேற்றுவித்தல் என்றால், தூக்கில் ஏற்றி உயிரை முடித்தல் ; இதனால், கொல்வதை சொல்கிறது. அது மட்டும் இன்றி, கழு ஏற்றுவித்த என்பதில் உள்ள கழு என்பது பறவைகள் ஏறி உயிர் வாழும்படி செய்தது என்றும் சொல்லலாம். இதனால், அரக்கர்களைப் பிணமாக்கியதை சொல்கிறார். பிணங்கள் கழுகுகளுக்கு உணவாகும் என்பதை சொல்கிறார்.
Leave a comment