மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த * காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை, * கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப் * பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.4
பசுக்களை ரக்ஷணம் செய்யும் இடை சாதியிலே பிறந்து கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் விஷயமாக குறப்பெண்கள் குறிஞ்சி ராகத்தோடு கூடின பாட்டுக்களாலே இசை கூடும்படி பாடி, பாட்டுக்கிணங்கக் கூத்தாடி நின்றுள்ள திருமாலிருஞ்சோலை. அதே மஹாபலியின் உடைய புத்திரனான பாணாசூரனுடைய மகளான உஷைக்கு அவள் தகப்பனால் செய்யப் பட்டு இருந்த காவலை எல்லாம் (தன் திருப் பேரன் ஆன அநிருத்தன் களவிலே அவளைப் புணருகையால் வந்த சிறையை மீட்கைக்காக அரண் அழித்துப் போட, ஒப்பற்ற காளை விரும்பி வசிக்கின்ற மலை திருமலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மகாபலி என்று சொல்வது மூலம், பாணாசூரனின் வீரமும் அவன் கோட்டையின் வலிமையும் சொல்லப்படுகிறது.
மாகாபலி சக்ரவர்த்தியின் சந்ததியில் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை என்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டாள் ; அவனிடத்தில் மிகுந்த ஆசை உடையவளாய், தன் உயிர்த் தோழியான சித்திரலேகைக்கு அந்த செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்த புருஷன் கிருஷ்ணனுடைய பேரனும், பிரத்யும்னனது பிள்ளையுமாகிய அநிருத்தன் என்று அறிந்தாள் ; ‘அவனைப் பெறுவதற்கு உபாயம் செய்ய வேண்டும்’ என்று அந்த தோழியையே வேண்டினாள். அவள் தன் யோக வித்தை மஹிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள்.
இச்செய்தியைக் காவலாளரால் அறிந்த அந்தப் பாணன் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே கட்டிப் போட்டிருந்தான். துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் எல்லாரும் கலங்கியிருந்த போது, நாரத முனிவனால் நடந்த வரலாறு ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லப் பெற்றான். பெரிய திருவடியை (கருடன்) நினைத்தருளி, உடனே வந்து நின்ற கருடாழ்வானது தோள் மேலேறிக் கொண்டு பலராமன் முதலானாரோடு பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே, அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த சிவபிரானது பரிமத கணங்கள் எதிர்த்து வர, அவர்களை எல்லாம் அழித்தான்.
பின்பு சிவபெருமானால் ஏவப்பட்ட ஓரு தேவதை மூன்று கால்களும், மூன்று தலைகளும் உள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தம் செய்ய, தானும் ஒரு சக்தியினாலே அவனைத் துரத்தி விட்டான். பின்பு, பாணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்த அக்நி தேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்து வர, அவர்களையும் நாசம் செய்து, பாணாஸுரனோடு போர் செய்யத் தொடங்க, அவனுக்குப் பக்க பலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றும் செய்யாமல் சோர்வடைந்து விடும்படி செய்து, ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் ஓட்டினான்.
பின்னர், அனேகமாயிரம் சூரியர்க்குச் சமமான தனது சக்ராயுதத்தை எடுத்து பிரயோகித்து, அப்பாணனது ஆயிரம் தோள்களையும் தாரை தாரையாய் உதிரம் ஓழுக அறுத்து அவன் உயிரையும் சிதைப்பதாக இருக்கையில், பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் பாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளினான். பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருந்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம் புரிவிக்க அதன்பின் திரும்பி வந்தான் என்ற வரலாறு சொல்லப்பட்டது. உஷை அநிருத்தனுக்குச் சேஷமானது வாணனை வென்ற பின்னரே ஆதலால் “வாணன் மகளிருக்க காவலைக் கட்டழித்த” எனப்பட்டது.
Leave a comment