மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து, * கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை, * புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும் நின்று, * பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.3
புன்னையும் செருந்தியும் புனத்தில் உண்டான வேங்கையும் ஒழுங்குபட நின்று பொன்னரி மாலைகள் (ஒரு ஆபரணம்) சுழற்றியது போல் இருக்கிற சோலைகளை உடைய திருமாலிஞ்சோலை – அதே (ஆள்வலியாலும் தோள் வழியாலும் நமக்கு அழிவில்லை என்று) பொருந்தியிருந்த நாகாசுரனை அழிக்கும் வகைகளை ஆராய்ந்து அவனைத் தப்ப முடியாதபடி வளைத்து கொன்று அவன் கல்யாணம் செய்வதாகப் பொறுக்கித் திரட்டி வைத்த பதினாராயிரத்தொரு நூறு பெண்களையும் கொள்ளை கொண்டு தேவிமாராக்கியவனாய் கடல் போன்ற வடிவை உடையவனுடைய திருமாலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஆள் வலியாலும் தோள் வலியாலும் நமக்கு ஓரழிவும் இல்லை என்று உறுதியாக நினைத்து அஹங்காரம் பிடித்த நரகாஸுரன், தேவர்களை தாக்கியும், தேவ மாதரைப் பிடித்தும், அதிதியினுடைய (விருந்தாளிகளின்) குண்டலங்களைப் பறித்தும், இப்படி சொல்ல முடியாத கொடுமைகளாலே தேவர்களைக் குடி இருக்க விடாதபடி பல துன்பங்களை செய்ய, தேவேந்திரன் த்வாரகைக்கு வந்து, கண்ணனிடத்தில் ‘இவனை அழிக்க வேண்டும் ’ என்று வேண்டிக் கொள்ள, பின்பு கண்ணன் அவனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து, ஸத்யபாமைப் பிராட்டியோடு, பெரிய திருவடியை (கருடன்) மேல் சென்று, அந்த அஸுரனது இருப்பிடமாகிய பிராக்ஜோதிஷ்புரத்துக்கு எழுந்தருளி, அவன் தப்பிப் போக முடியாதபடி அவனை வளைத்துக் கொண்டு, திருவாழியினை உபயோகித்து, அவனை கொன்று, நெடுங்காலமாய்த் தான் மணம் புனர வேண்டும் என்று நரகன் மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினபுரியில் பல திசைகளிலில் இருந்து சிறை வைக்கப்பட்ட கன்னிகைள் பதினாறாயிரத்து ஒரு நூற்று வரை, கண்ணன் தான் கைக் கொண்ட வரலாறு, கூறப்பட்டுள்ளது.
புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு என்ற இம்மரங்களின் பூக்கள் பொன் நிறம் கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட பூக்கள் நிறைந்த மரங்கள் இந்த தென் திருமலையில் ஒழுங்கு பட நிற்பதால் இந்த மலைக்குப் பொன்னினால் செய்யபட்ட மாலை என்னும் ஆபரணம் ஸமர்ப்பிப்பது போன்றுள்ளது என்று சொல்கிறார்.
Leave a comment