கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும், * வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை, * நஞ்சு உமிழ் நாகம் எழுந்தணவி நளிர் மாமதியை * செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.2
விஷத்தை உமிழ்கின்ற மலைப் பாம்பானது குளிரிந்த அந்த சிகரத்தின் மேலே தவழுகிற பூர்ணசந்திரனை (தனக்கு உணவாக நினத்து,) கிளர்ந்து கிட்டி சிவந்த தேஜஸ் உடைய நாவாலே அளைக்கும் திருமாலிருஞ்சோலை ; கம்ஸனும் காளியனும் குவலாயபீடம் என்னும் யானை, யமளார்ஜுனங்களும் அரிஷ்ட்டாசுரன் என்ற ரிஷபமும், தம் தம் உடைய வஞ்சனைகளாலே தாம் தாம் முடியும்படியாக திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனாய் நீலமணி போன்ற திரு நிறத்தை உடையவனுடைய திருமலையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தென் திருமலையிலுள்ள மலைப்பாம்புகள் பூர்ண சந்திரனைப் பார்த்து, அவனைத் தமது உணவாக கருதி, படமெடுத்து மேல் எழுந்த தமது நாவினால் சந்திர மண்டலத்தை தடவ பார்க்கும் என்று சொல்லி, இந்த திருமலையின் உயரத்தை குறிப்பிடுகிறார்.
பெரிய திருமொழி (6.5.6)ல் சொன்ன ‘புகுவாய் நின்ற போதகம்‘ என்று கம்ஸன் அரண்மனைக்கு வாசலில் நின்ற குவலாயபீடம் என்ற யானை, (பெரிய திருமொழி 10.7.13)ல் சொல்லிய ‘வம்பவிழ் கானத்து மால்விடை யோடு‘ என்று காட்டிலே நலிவதாக வந்த அரிஷட்டனான ரிஷபமும் போன்ற விரோதிகள் தேய வளர்ந்தவன் இந்த கண்ணன் என்கிறார்.
கம்சனும், காளிங்கன் என்ற பாம்பும், குவலாயபீடம் என்ற யானையும், இரட்டை மருத மரங்களும், அரிஷ்டாசுரன் என்ற ரிஷபமும் (எருதும்), தம்தம் வஞ்சனைகளால் முடிய காரணமான கண்ணன் எழுந்தருளி இருக்கும் இடம் திருமாலிருஞ்சோலை என்கிறார்.
Leave a comment