உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஒடிச் சென்ற, * உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை, * பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு, * விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே.
சென்ற பதிகத்தில், திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் கிருஷ்ணாவதார, இராமவதார குணநலன்களை அனுபவித்த ஆழ்வார், அவரை காட்டிலும், அவர் உகந்து எழுந்தருளி இருக்கும், தென்திருமலையே, மிகவும் பராப்பியம் அல்லது அடைய தகுந்தது என்று சொல்லி, தென் திருமலையை உயர்த்தி பாடினார்.
இப்படி பேசி அனுபவித்தும், ஆழ்வாருக்கு பிராப்தி கிடைக்கவில்லை, ஆதலால், மீண்டும் அவதார குண விசேஷங்களை எல்லாம், பிரகாசிக்கும்படி, அழகர் தென் திருமலையில் நிற்கின்ற நிலையை, முன்பு சொன்னதற்கு ஒரு குறையும் வராமல், தென்திருமலையின் விசேஷங்களையும், எம்பெருமானின் குணங்களையும் கூட சொல்லி அனுபவிக்கிறார். முன்பு முதலில் இராம அவதாரத்தை முதலில் அனுபவித்து பின்னர் கிருஷ்ணா அவதாரத்தை அனுபவித்தார், இங்கு, முதலில் கிருஷ்ணாவதாரத்தையும் பின் இராமவதாரத்தையும் அழகரிடம் தரிசித்து, அனுபவிக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 4.3.1
கொன்றைகளானவை மலையினிடத்திலே பொன்னால் செய்யப்பட்டு முறிந்த மோதிரங்களையும் பொற்காசுகளையும் கையால் வாரி விருப்பத்தோடு கொடுப்பாரைப் போல் இருப்பதாய், ஆச்சரியப்படத்தக்க திருமாலிருஞ்சோலை என்னும் பேரை உடைய அந்த மலையே, ருக்மிணிப்பிராட்டியை மீட்டுக் கொண்டு போவதாக பின் தொடர்ந்து ஓடி வந்த (அவன் தமையனான) ருக்மனை துரத்தி பிடித்துக் கொண்டு தேர் தட்டில் இருந்து (அவனை) மானபங்கம் செய்த மிடுக்கை உடையவனுடைய திருமலையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ருக்மணி பிராட்டியை அவள் விரும்பியபடி, ஆனால் அவள் குடும்பத்தில் மற்றவர்கள் வேறு விதமாக முடிவு செய்ததை எதிர்த்து, கண்ணன் அவளை தூக்கி வந்த போது, சிசுபாலன் போன்றவர்கள் படையுடன் எதிர்க்க, அவர்களுடன் யுத்தம் செய்த போது, ருக்மினியின் தமையனை மான பங்க படுத்திய வரலாறு சொல்லப் படுகிறது.
ருக்மணியின் சகோதரனுக்கு ருக்மண் என்றும், ருக்மி என்றும் பெயர். உறைத்திடுதல் என்றால், மான பங்கம் செய்தல்; அதாவது தலை முடியை எடுத்து, ருக்மிணிப் பிராட்டியை கைப் பிடித்து கொண்டு வந்த போது, அவளை மீட்க வந்த ருக்மனை மான பங்கப்படுத்திய மிடுக்கை சொல்கிறார்.
திருமாலிருஞ்சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள், நரம்பும் இதழுமாகப் பூக்களைச் சொரிந்து, முறிந்து, பொன் மோதிரங்களையும் பொற் காசுகளையும் வாரிப் பிறர்களுக்குக் கொடுப்பது போன்றுள்ளது என்கிறார்.
Leave a comment