சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள், * அந்திப் பலி கொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை, * இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான், * சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே.
பெரியாழ்வார் திருமொழி 4.2.9
பட்டுப் பூச்சிகள் ஸர்வ ஸ்வாமியான அழகருடைய கோவைக்கனி போன்ற திரு அதரத்துக்கு ஒத்திருக்கைக்காக கண்டவிடம் எங்கும் சிதறிப் பறக்கிற தாழ்வரையை உடையதாய் அழகியதான திருமாலிருஞ்சோலை – அங்கே வசிக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேகத்தை பூஜிக்கும் ஜனங்களை கண்டால்) அவயங்கள் சிதறும்படி அடித்துக் கொண்டு அவர்கள் தேகத்தில் இருந்து புறப்படுகிற சிவந்த ரத்தத்தைக் கொண்டு அந்திப் பொழுதில் ஆராதனம் சமர்ப்பித்து தம் ஆபத்துக்கு ரக்ஷகமான தனமாக நினைத்து சேவித்துக் கொண்டு போகின்ற சுவாமி வசிக்கின்ற திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஸ்ரீ வைஷ்ணவ நாம ரூபங்களோடு கூடி, பகவத் பாகவத பக்தியை உடையனவாய்த் திரியும் பூதங்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பல உண்டு; அவை அந்த திருமலையில் யாரேனும் ஆஸ்திகர்களாக எழுந்தருளக் கண்டால், அவர்கள் எதிரில் நிற்காமல் அஞ்ஜலி பண்ணிவிட்டு மறைந்து விடும். அந்த ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை, தேகத்தை மட்டுமே காத்துகொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை அவயங்கள் சிதற அடித்துக் கொன்று, அவர்களுடைய தேஹத்தில் நின்றும் “பெருகுகின்ற ரத்தத்தை அழகருக்கு திருவாராதன வடிவாக சமர்ப்பித்துப் பருகிக்கொண்டு, இதுவே ஆபத்துக்கு உதவும் இடம் என்று இந்த தென் திருமலையிலே வாழும் என்கிறார்.
இந்திர கோபங்கள் என்பது பட்டு பூச்சிகளை குறிக்கும். எம்பெருமானின் சிவந்த அதரங்களுக்கு உவமையாகும். “சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும், இந்திரகோபங்களே யெழுந்தும் பரந்திட்டனவால்” (நாச்சியார் திருமொழி 9.1) என்று ஆண்டாளும் கூறி உள்ளார்.
Leave a comment