திவ்ய பிரபந்தம்

Home

4.2.8 குறுகாத மன்னரைக் கூடு

பெரியாழ்வார் திருமொழி 4.2.8

ஆறுகால்களை உடையதாய் அழகியதாய் இருந்துள்ள வண்டுக்களானவை விடியற் காலத்தில் எம்பெருமானுடைய ஸஹஸ்ர நாமங்களையும் சொல்லி பாடும் திருமாலருஞ்சோலை – திருமலையை அணுகாத ராஜாக்களுடைய இருப்பிடத்தை குலைத்து (அழித்து) வெவ்விதான காட்டின், (அதாவது, ‘வெம்மினொளி வெயில் கானகம்‘ (திருவாய்மொழி 1.4.1)ல் கூறியபடி, கொடியதாய் நிலவும் உள்ளே புக முடியாதபடி இருக்கும் காட்டின் வெம்மை) நடுவே சிற்றடியோடே போகும் படி பண்ணுகிற திருமகளின் மணாளன் வசிக்கின்ற சிறந்த திருமலை ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆறுகால்களையுடைய அழகிய வண்டுகளானவை எம்பெருமானுடைய ஸஹஸ்ராமங்களை (ஆயிரம் ஆயிரமான திரு நாமங்களை) பாடும் இடம் தென் திருமாலிருஞ்சோலை ஆகும்.

தென் திருமலையை அணுகாத ராஜாக்கள், அனுகூலர்களாக சேர்ந்து வாழ்ந்து போகலாம் என்று இல்லாமல், பிரதிகூலர்களாக சேராது இருப்பவர்களை குலைத்து என்கிறார். குலைத்து என்பது, போக்கியம் எல்லாவற்றையும் இழந்து என்கிறார். ராஜாக்களின் இருப்பிடத்தை குலைத்து கடுமையான காட்டினில் சிறிய அடிகள் வைத்து அந்த அரசர்களை செலுத்துகின்ற எம்பெருமான், எழுந்தருளி இருக்கின்ற மலை தென் திருமலையாகும். கெட்டு போகும் போது அந்த ராஜாக்கள் பெரிய வழிகள் இருக்கும் போது, யாராவது பின் தொடர்வார்களோ என்று பயந்து சிறிய பாதையை தேர்ந்து எடுத்து செல்கிறார்கள் என்கிறார்.

இதற்கு உள்ளாரத்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையின் படி, “ஆச்சார்யார்கள் போன்றவர்களை வண்டுக்கு உபமானம் ஆகும். வண்டுகள் தேனை விட்டு மற்றொன்றைப் பருகமாட்டாததால், அவைகள் மதுவ்ரத என்று பெயர் பெறும். இவர்களும் “உளங் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை” என்ற பகவத் விஷயமாகிற எம்பெருமான் என்ற தேனை விட்டு மற்றொன்றை விரும்ப மாட்டார்கள். வண்டுகள் ஆறுகால்களை உடையதால் அவை ஷட்பத நிஷ்ட்டம் எனப்படும். இவர்களும்   ஷட்பதம் நிஷ்ட்டர்கள் என்று கூறபடுவார்கள்; ஷட்பதம் என்பது “ஸ்ரீமந்நாராயண சரணௌ ‘ என்று தொடங்கி, ‘சரணம் ப்ரபத்யே’ என்ற முதல் வரியையும், “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்ற இரண்டாவது வரியையும் உடைய த்வய மகா மந்திரம் ஆகும். இந்த த்வயா மகா மந்திரத்தையே எப்போதும் சொல்லி கொண்டு இருக்கும் மஹாநுபாவர்கள். இப்படி எம்பெருமானுடைய திருநாமங்களை சிற்றஞ் சிறுகாலையில் இருந்து அநுஸந்தித்துக் கொண்டு அவனை அடி பணிபவர்களை கூறுகிறது.

Leave a comment