மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல், * முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை, * கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன், * தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே.
பெரியாழ்வார் திருமொழி 4.2.7
கொலையையே தொழிலாக உடைய கூரிய வேலை உடையவனாய், ராஜ நீதியை வழுவற நடத்துமவனாய், பெருமையை உடையவனாய், தர்ம யுத்தம் பண்ணுபவனாய், அழகிய ‘கூடல்’ என்னும் மதுரைக்கு நிர்வாககனாய் தக்ஷிண (தெற்கு) திக்குக்கு பிரதானனான மலயத்வஜ ராஜனாலே கொண்டாடப்படுமதான தென் திருமாலிருஞ்சோலை ; ராஜாக்கள் எல்லாரும் நாம் இவனை வெல்லலாமோ என்று குடல் மறுகும்படியாக மைத்துனன்மாரான பாண்டவர்களுக்காக ஒப்பற்ற தேரின் மேலே முன்புறத்திலே சாரதி வேழம் தோற்ற நின்று நீர் நரம்பில் வாருணா அஸ்திரத்தின் வழியே கீழ் உண்டான ஜலமானது குமிழி எறிந்து கிளரும்படி செய்தவன் வசிக்கின்ற ஸ்தலம் திருமலையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகளை தண்ணீர்க்கு அழைத்து சென்றதில் தொடங்கி, அவர்கள் பக்கம் சார்ந்து உள்ளவனான கண்ணன், கடினமான இடத்திலும் நீர் நரம்பு அறியவல்லவன் ஆகையால், அங்கு கீழுள்ள நீரை வெளிக்கொணர்ந்து குதிரைகளை கொண்டு வந்து விட்டு, நீரூட்டி, புரட்டி எழுப்பிக் கொண்டு, பின் சென்று, அவற்றை தேரில் பூட்டிக் கொண்டு அர்ஜுனன் முன்னே நிறுத்த, இதைக் கண்ட எதிர் தரப்பு அரசர்கள் எல்லாம், அர்ஜுனன் பக்கம் இந்த கண்ணனுக்கு ஓர் தலை பட்சம் ஏன் என்று கேட்கிறார். இனி நாம் இவனை எப்படி வெல்வது என்று கவலைப்படுவது குடல்மறுகி என்று சொல்வது ஆயிற்று.
அகஸ்திய முனிவன் வீற்றிருக்கும் மலய பர்வதத்திற்கு சென்று ‘தர்ம வழியில் நடத்தக் கடவேன்‘ என்று மலய பர்வதத்தை எழுதிக் கொடுத்த ‘மலயத்வஜன்‘ என்ற அரசன் தேரேறிக் கங்கை நீராடப் போகையில் ‘மதிதவழ் குடுமி’ (திருவாய்மொழி 2.10.2) என்ற அளவில் சென்றவாறே தேர் வடம் ஓடாமல் நிற்க, அந்த அரசன் அவ்விடத்திலேயே தேரை நிறுத்தி, ‘இங்கே தீர்த்த விசேஷமும், எம்பெருமானும் ஸந்நிதி பண்ணி இருக்க வேண்டும்“ என்று நினைத்து இறங்கி, ஆராய்ந்து பார்க்க, அவ்விடத்தில் அழகர், அவ்வரசனை நோக்கி, ‘இவ்வாற்றிலே நீராடு‘ என்று நியமித்தருள, ‘இவ்வாற்றுக்குப் பெயர் என்ன?‘ என்று அரசன் கேட்க, ‘முன்பு நாம் உலகளந்தபோது பிரமன் திருவடிகளை சுத்தம் செய்த காலத்தில் நம் பாதச் சிலம்பின் நீர் இதிலே தெறித்துச் ‘சிலம்பாறு‘ என்று பெயர் பெற்றது‘ என்று அழகர் அருளிச் செய்ய, அது கேட்ட அரசன் அவ்வாற்றில் நீராடி, கங்கா ஸ்நான விருப்பத்தையும் தவிர்த்து, திருமாலிருஞ்சோலை மலைமீது பேரன்பு கொண்ட வரலாற்றைத் திருவுள்ளம் பற்றித் “தென்னன் கொண்டாடும்“ என்றருளிச் செய்தார்.
Leave a comment