திவ்ய பிரபந்தம்

Home

4.2.6 ஏவிற்றுச் செய்வான்

பெரியாழ்வார் திருமொழி 4.2.6

பிரம்மாதி தேவர்களும், மகரிஷிகளும் தங்களுடைய ஆபத்திற்கு ரக்ஷகமான தனம் என்று நினத்து சேவித்துக் கொண்டு நிற்கிற தென் திருமாலரிஞ்சோலை ; கம்ஸன் ஏவின காரியங்களை செய்யும் பொருட்டு துணிந்து எதிர்த்து வந்த சாணூர முஷ்டிகரை சாகும்படியாக கூனி இட்ட சந்தனம் அணிந்த தோளாலே முறித்துப் போட்ட சாதுர்யம் உடையவன் வசிக்கின்ற திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஏவிற்றுச் செய்வான் ஏன் எதிர்ந்து வந்த மல்லரை என்று சொல்வது, மல்லரைப் பற்றி ஆகும். அவர்கள் தன்னிச்சையாக திரிந்தாலும் கம்ஸன் சொல்வதை கேட்டு மறுக்க முடியாதவர்களாய், இங்கு வந்து தோள்கள் தளர்ந்தாலும் கோழைகளாய் மடிவதை விட புகழோடு சேர்வோம் என்று இங்கு வருகிறார்கள்.

சாவத் தகர்த்த என்று சொல்வது குற்றுயிர் செய்ததோடு அன்றி அதையும் சர்வ சுலபமாக எம்பெருமான் செய்து விடுகிறான்.

கண்ணன், நம்பி மூத்தபிரானுடன் (பலராமன்) கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும்போது இடைவழியில் கூனியிட்ட சந்தனத்தை அணிந்துள்ள தனது திருத்தோள்களில் இட்டு கொண்ட குறி அழியாதபடி முஷ்டிக சாணுர மல்லர்களுடன் சண்டை போட்டு அழித்ததை கூறுகிறார். கூனி சந்தனம் சாத்திய உடனே பெண்களும் கண்களால் இலச்சினையிட்டு விடுவதால் அச்சாந்தில் ஏற்பட்ட இலச்சினைகளை அழிக்க இவனுக்கு மனம் இடம் தரவில்லை என்றும் சுவையாக கூறுவார்கள். இப்படி அனுகூலர்களை ரக்ஷித்து, பிரதிகூலர்களை அழிப்பவனும் ஆன எம்பெருமான் இந்த மலையில் வசிக்கிறான்.

தேவரும், முனிவரும் தமக்குப் புகலிடமாகக் கொண்டு நித்திய வாஸம் பண்ணுமிடம் திருமாலிருஞ்சோலை என்பது பின்னடிகளின் கருத்து. ஆவத்தனம் என்பது, ஆபத்து காலங்களுக்கு உதவக் கூடியது என்ற பொருளில் வருகிறது ; இங்கு ஆவத்தனம் என்பது அழகரைக் குறித்து சொன்னதாக கொள்ளலாம்.

Leave a comment