திவ்ய பிரபந்தம்

Home

4.2.11 மருதப் பொழில் அணி

பெரியாழ்வார் திருமொழி 4.2.11

மருதம் சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையை விரும்பி நித்ய வாசம் பண்ணும் கருங்கடல் போன்ற திரு நிறத்தை உடைய ஸ்வாமியானவனை வாழ்த்துவதையே விரதமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடுமவராய் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த இத்தை விரும்பி பாடுபவர்கள் கிருஷ்ணனுடைய திருவடிகளை காணப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மருதம் சோலைகளால் அலங்கரிக்கப்பட்டதால் திருமாலிருஞ்சோலை என்னும் திரு நாமத்தை பெற்றது என்கிறார். கருதி உறைகின்ற என்று சொல்வதால், நித்ய விபூதியைக் காட்டிலும் இதுவே நமக்கு சர்வ ஸ்தானம் என்று விரும்பி ‘எங்கள் குன்றம் கைவிடான்’ (திருவாய்மொழி 10.7.4) என்கிறபடி நமது திருமலையைக் கைவிடாதவனாக இங்கு நித்யவாசம் செய்கிறான்.

திருப்பல்லாண்டு பாடுகை என்பதே பெரியாழ்வாருடைய விரதம். இந்த பதிகம் படிப்பவர்க்கு பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார். மேலும் அரச்சாவதாரம் ‘அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர்‘ (பெரிய திருமொழி 4.9.5) என்றபடி விஷயம் ஆகையாலே இவ்விஷயத்தையே ஏத்துவோம் என்று விரதத்தை உடையவராய் மங்களாசாசனம் செய்கிறார்.

இந்த பதிகம் படிப்பவர்கள், கண்ணனுடைய கழல்களை அல்லது திருவடிகளை சேவிப்பார்கள் என்பதே பலன் ஆகும்.

Leave a comment