எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார், * விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை, * பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சிச் சென்று மாலை வாய்த் * தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே.
பெரியாழ்வார் திருமொழி 4.2.10
இரவுக் காலத்தில் திரியாமல் நின்றுள்ள பெண் யானைகள் ஆண் யானைகளோடு உராய்ந்து சென்று அப்புணர்ச்சியால் உண்டான ஆனந்தம் முற்றி களிக்கும் தென் திருமாலருஞ்சோலை – கணக்கிட முடியாதவர்களாய் ரூப சௌந்தர்யங்களால் (ரூப குணங்களாலும், ஆத்ம குணங்களாலும்) வந்த பெருமை உடைய தேவிமார்கள் எட்டு திசைகளிலும் மிகவும் விளங்கும் (அவர்கள் நடுவே) தன் பெருமை தோற்ற ஸ்ரீ துவாரகையில் இருக்கிற பரிசுத்தனானவன் வசிக்கின்ற திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எல்லா திசைகளிலும் கணக்கில் அடங்கா தேவியர் வீற்று இருக்க, அவர்கள் நடுவில் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் கண்ணன் எழுந்தருளிய இடம் தென் திருமாலிருஞ்சோலை ஆகும் என்கிறார். இத்தனை பேர் இருந்த போதும், ஒவ்வொருவரும் ‘என்னை ஒழிய மற்றொருவரை அறியான் ‘ என்னும்படி இருக்க செய்யும் அவன் வீற்று இருந்த தோரணை சொல்லப்படுகிறது. அடியவர்கள் ரசிப்பதற்காவே இப்படி இவன் செய்வது. அங்கு பெண் யானைகள் பகலில் திரிந்து, இரவில் ஆண் யானைகளுடன் சேர்ந்து களிப்புடன் இருக்கும் மலையும் அதுவே ஆகும் என்கிறார். நரகாசுரனை வென்று அவன் பிடித்து வைத்துஇருந்த பத்தாயிரம் தேவிமார்களை கண்ணன் மீட்டுக்கொண்டு வந்ததை நினைவில் கொள்க.
Leave a comment