திவ்ய பிரபந்தம்

Home

4.2.5 ஒரு வாரணம் பணி கொண்டவன்

பெரியாழ்வார் திருமொழி 4.2.5

கறுத்த ஆனையானது தன்னுடைய பிடியானது (பேடை அல்லது பெண் யானை) தன்னை விட்டு பிரணய ரோஷத்தாலே பிரிந்து செல்ல முடிவு செய்து நடை இட்டு போக ஆரம்பிக்க, ‘கடல் வண்ணன் மேல் ஆணை’ என்று சொல்ல அப்புறம் போகாமல் மீண்ட யானை வசிக்கும் இடம் குளிர்ந்த திருமாலிருஞ்சோலை ; பெரிய பொய்கையில் ஒப்பற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கைங்கரியத்தை ஏற்றுக்கொண்டவன், கம்ஸனுடைய ஒரு யானையான குவலயாபீடத்தின் உயிரை முடித்தவன் எழுந்தருளி இருக்கும் இடம் திருமலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

“ஆனை காத்து ஒரானை கொன்று” என்ற திருச்சந்த விருத்த பாடலை இங்கு நினவு கொள்ளலாம். கஜேந்தரன் என்ற ஒரு வாரணம் அல்லது யானையைக் காத்து, குவலயாபீடம் என்ற கம்ஸன் ஏவிய ஒரு யானையைக் கொன்றான்; அர்ஜுனன் என்ற ஒரு அத்தானைக் காத்து, சிசுபாலன் என்ற ஒரு அத்தானைக் கொன்றான்; விபீஷணன் என்ற ஒரு ராக்ஷஸனைக் காத்து, ராவணன் என்ற ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; சுக்ரீவன் என்ற ஒரு குரங்கைக் காத்து, வாலி என்ற ஒரு குரங்கைக் கொன்றான்;  அகல்யா என்ற ஒரு பெண்ணைக் காத்து, தாடகை என்ற ஒரு பெண்ணைக் கொன்றான்; யசோதாவின் உடன் பிறந்தவரும், நப்பின்னையின் தந்தையுமான கும்பர் என்ற ஒரு அம்மானைக் காத்து, கம்ஸன் என்ற ஒரு அம்மானைக் கொன்றான்;

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை‘ (திருவாய்மொழி 3.5.1)ல் சொல்லியபடி தூரத்தில் குளிர்ந்த சோலையும் பூக்கள் நிரம்பிய பொய்கையும் தோன்ற அதனுள்ளே துஷ்டத்தனமான ஜந்து உள்ளது என்று அறியாமல் சென்ற கஜேந்தரன் என்கிறார். ‘காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்’ (பெரிய திருமொழி 5.8.1)ல் சொல்லியபடி தனது குணம் காரணமாக பூவைப் பறித்து கரை ஏறுவதற்கு முன், ‘மோக்ஷம் அடைவதிற்கு ஒரு வழியும் கிடைக்கவில்லையே’ என்று காத்துக்கொண்டு இருந்த முதலை ஒன்று நீருக்கு இழுக்க, இது கரைக்கு இழுக்க, இப்படி பல காலம் கடக்க, தன்னால் செய்வது ஒன்றும் இல்லை என்று திருவடிகளை நினத்து கூப்பிட்ட தோரணையை அந்த சப்தம் எம்பெருமானை அடைய, அவன் பொய்கை அடைந்து முதலை வாயில் இருந்து யானையை விடுவித்து அந்த பூவினை திருவடிகளில் ஏற்று யானையை அடிமை கொண்டவன்.

ஒரு வாரணம் உயிருண்டவன் என்றதில் பெரிய திருமொழி 6.5.6 ல் ‘புகுவாய் நின்ற போதகம் வீழ‘ என்று சொன்ன கம்ஸன் ஊர் புகும் வாசலில் போதை ஏற்றி நிற்க வைக்கப்பட்ட குவலயாபீடம் என்ற யானை.

திருமாலிருஞ் சோலைமலையிலுள்ள ஒரு யானைக்கும்  அதன் பெண் யானைக்கும் ஒரு சண்டை நேர்ந்து, அதனால் அந்த பெண் யானை கோபம் கொண்டு, அதனைத் துறந்து போக முயற்சிக்கையில், ஆண் யானையானது, “அழகர் ஸ்ரீபாதத்தின் மேலோணை; நீ என்னைத் துறந்து அகலக் கூடாது” என்று ஆணையிட, அந்த பெண் யானை அந்த ஆணையை மறுக்கமாட்டாமல் அங்கேயே இருந்தது என்ற விசேஷத்தைக் கூறுகிறது.

Leave a comment