அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை, * குலம் பாழ்படுத்துக்கு குல விளக்காய் நின்ற கோன் மலை, * சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர் * சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே.
கிருஷ்ண அவதாரத்தில் எம்பெருமானின் லீலைகளை அனுபவித்த ஆழ்வார், இராம அவதாரத்தின், குணநலன்களை அனுபவிக்க விரும்பி அதனையும் பாடல்கள் மூலம் வெளியிட்டு, பின்னர் இந்த அவதாரங்களின் மூலமான, பரமாத்மாவை அனுபவிக்க ஆசைபட்டு ஆழ்வார், அதனையும், எம்பெருமான் எங்கே, அவனை காண வேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவாகவும், பக்தி அனுபவம் அதிகமாகி, அது கண்களின் வழியே வெளிப்பட்டு, அவனை இங்கே கண்டவர்கள் உண்டு என்ற இன்னொரு பிரிவாகவும், தன்னையே பிரித்துக்கொண்டு, அனுபவித்ததையும் முன்பு பார்த்தோம்.
அவதாரங்களை கண்ணால் காண வேண்டும் என்று ஆசைபட்டாலும், அது அந்தந்த காலங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்ததாலும், பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்காததாலும், பின்னானார் வணங்கும் சோதி, என்றபடி, அவதாரங்களுக்கு பின்னால் பிறந்தவர்களும் இழக்க வேண்டாதபடி, எம்பெருமானின் குணநலன்கள் பிரகாசிக்கும், எம்பெருமான் அர்ச்சாவதாரமாக உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவிக்க தொடங்கும் ஆழ்வார், முதலில் திருமாலிருஞ்சோலை என்ற தெற்கு திருப்பதியில் இராம, கிருஷ்ண அவதாரங்களின் லீலைகளையும் சேர்த்து அங்கிருக்கும் அழகரைக் காட்டிலும், அவர் உகந்து அருளின மலையை அடைந்தாலே அதுவே ஒரு அடியவன் சேர வேண்டிய இடம் என்பது போல இருக்கும்படியான பாசுரங்களை இந்த பதிகத்தில் காணலாம்.
பெரியாழ்வார் திருமொழி 4.2.1
தேவ ஸ்த்ரீகள் பாதச் சிலம்புகள் ஒலிக்கும்படி பூலோகத்தில் வந்து நீராடும் பெருமையை உடைய திருச்சிலம்பு ஆறு ஆனது இடைவிடாமல் பெருகி நிற்கும் அழகியதான திருமாலிருஞ்சோலை மிருகங்களை அலைத்தும் பயப்படுத்தியும் கொன்றும் திரியும் ராக்ஷ்ஸர்களை குடும்பம் முழுவதும் பாழாக்கி இஷ்வாகு வம்சத்துக்கு பிரகாசமாக நிற்கும் ஸர்வஸ்வாமியானவன் நித்ய வாசம் செய்கிற மலை திருமலை ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அலம்பா, என்பது, ‘இனி இங்கு இவர்களுக்கு கீழே குடியிருக்க முடியாது எங்கே போவோம்’ என்று நிலையை சொல்லியது. வெருட்டா என்பது வெருளப் பண்ணும்படி செய்ததை சொல்வது. அதாவது தங்களது உக்ர வேஷங்களையும் உக்ர வியாபாரங்களையும் கண்டு பயப்படும்படி செய்கை என்கிறார். அது மட்டுமின்றி கொலைக்கு அஞ்சாமல் கொன்று அதுதானே பயணமாய் திரியும் என்கிறார். இப்படி கரதூஷணாதிகளும் இராவாணாதிகளும் மூன்று உலகங்களிலும் திரிந்து வாழ்வதை இது குறிக்கிறது.
குலம் பாழ்படுத்துக்கு என்று சொன்னது, மேலே சொன்ன ராக்ஷ்ஸர்கள் மட்டும் அல்லாது, அவர்களின் குலம் முழுவதும் கொன்று போடுவது சொல்லப்படுகிறது.
குல விளக்காய் நின்ற என்று சொன்னது, இராவணன் திகவிஜயம் செய்தது முதல் தொடங்கி ஒளி முழுங்கி இருந்த இஷ்வாகு வம்சம், ஸ்ரீ ராமன் திரு அவதாரம் செய்து இராவணாதிகளை முடித்தது முதல் பிரகாசித்ததால் குல விளக்கு என்கிறார். குலசேகர்ஆழ்வார், ‘வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி’ என்று சொல்லி உள்ளார்.
சிலம்பு ஆர்க்க என்றது, தேவ ஸ்த்ரீகள் முன்பு நூபுர கங்கையில் நீராட வரும் போது ராவணன் போன்ற ராக்ஷஸர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருப்பிடத்தை விட்டு புறப்படுவது அந்த அரக்கர்கட்குத் தெரிய கூடாது என்பதால் தம் காற்சிலம்புகளை கழற்றி விட்டு வருவார் சிலரும், அவை ஒலி செய்யாத படி, பஞ்சை இட்டு அடைத்துக் கொண்டு வருவார் சிலரும் இருப்பார்கள். எம்பெருமான் அவதரித்த பின், அரக்கர் குலம் பாழ்படுத்த பின்பு, சிலம்பு ஒலிக்க வருவார்கள் என்ற கருத்து வெளிப்படும். தேவ ஸ்த்ரீகள் ஏன் இங்கே நீராட வேண்டும் என்றால், தற்போது அவர்கள் இருக்கும் ஸ்வர்க்க லோக வாழ்க்கை முடியும் தருணத்தில் புண்ணியம் தேடி கொள்ளும் தேசம் இது ஆகும்.
சிலம்பாறு என்பது நூபுர கங்கை என்ற வடமொழிப் பெயர் ஆகும். திருமால், உலகம் அளந்த காலத்தில் மேலே ஸத்ய லோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கை கமண்டலத்தில் உள்ள கங்கை தீர்த்தத்தால் கழுவ, அந்த கால் சிலம்பினில் இருந்து தோன்றியதனால் சிலம்பாறு என்று பெயர் வந்தது. கூரத்தாழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவம் என்ற நூலில் அருளி செய்தபடி, ஆழ்வார் பாசுரங்களைக் கேட்ட குன்றுகள் உருகி பெருகியதால், அதற்குச் சிலம்பாறு என்று பெயர். சிலம்பு என்பது குன்றுக்கும் பெயர்.
திருமாலிருஞ்சோலை, நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, பாண்டி நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்று. ‘கோயில், திருமலை, பெருமாள் கோயில், அழகர் திருமலை’ என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிற நான்கு திருப்பதிகளுள் ஒன்றும், “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்றும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’ (இராமனுச நூற்றுஅந்ததாதி, 106) என்றபடி ஆன்றோர் கொண்டாடப் பெற்ற மஹிமையை உடையதும், “உலக மேத்தும், தென்னானாய் வடவானாய் குடபாலானாய், குணபாலதாயினாய்” என்று திருநெடுந்தாண்டகம் (10) என்ற பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொன்னபடி, வடக்கு வீடு எனப்படும் திருவேங்கடத்தையும், கிழக்கு வீடு எனப்படும் திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசத்தையும், மேற்கு வீடு எனப்படும் ஸ்ரீரங்கத்தையும் போல் திருமாலிருஞ்சோலை, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படும் திவ்யதேசம்.
“ஆயிரம் பூம்பொழிகளையுடைய மலை ஆதலால், ‘மாலிருசோலைமலை’ என்று திருநாமமாயிற்று.
‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே’ (பெரிய திருமடல் 1.4) என்று சொன்னபடி இந்த மலை பூமி பிராட்டியின் திருமுலைத் தடங்கள் ஆனபடியால், எம்பெருமானுக்கு மிகவும் அந்தரங்கமான பிரியம் உள்ள இடமாக அமைந்துள்ளது என்கிறார்.
Leave a comment