மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம், * திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல், * எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இருநிலம் புக்கிடந்து, * வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்.
பெரியாழ்வார் திருமொழி 4.1.9
பூமியும் மலைகளும் அலை எறிகிற சமுத்திரங்களும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களுமான இவை எல்லாவற்றையும் நிச்சயமாக பிரளய காலத்திலே விழுங்கி பிற்பாடு வெளிப்படுத்தின தேவனை ஊற்றத்துடனே நாடுகிறீர்கள் என்றால்; நினைக்க அரிதான ஒப்பற்ற மகாவராஹமாய் பெரிய பூமியை பிரளயத்திலே மூழ்கி அண்ட பித்தியில் இருந்து முழுவதும் விடுவித்து அழகியதாய் கறுத்து இருந்துள்ள கூந்தலை உடைய ஸ்ரீ பூமி பிராட்டியோடு திருமணம் புணர்ந்தவனை கண்டார் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முன்பு ஒரு நாள், மஹாப்ரளயம் நேர்ந்தபோது உலகங்கள் யாவும் அதற்கு இரையாக, அப்போது எம்பெருமான் கருணை கொண்டு, உலகங்கள் அனைத்தையும் தனது திருவயிற்றில் வைத்து காத்தது முதலில் கூறப்பட்டது.
திண்ணம் விழுங்கி என்று சொன்னது, இந்திர ஜாலம் செய்வாரைப் போல் விழுங்கினதாகக் காட்டுவதே அன்றி, மெய்யாக விழுங்கிவிட வில்லை என்பதாகும்.
‘சிக்கன நாடுதிரேல்’ என்பதற்கு ‘காணப்படுவன் ஆகில் காண்போம், இல்லை என்றால் மீள்வோம்’ என்று மேல் எழுந்தவாறு தேடுகை இல்லாமல், கண்டே விட வேண்டும் என்ற ஆதரத்துடன் தேடுகிறீர்கள் என்றால் இனி சொல்வதை பார்ப்போம் என்கிறார்.
எண்ணற்கரியது என்பது ஹிரண்யாக்ஷன் என்ற அஸுரன் தன் வலிமையால் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிச் சென்ற போது, தேவர் முனிவர் முதலியோர் வேண்டுகோள் வைக்க, திருமால், அழகாலும் வடிவின் பெருமையாலும் நெஞ்சினால் நினைத்து அளவிட முடியாதபடி மஹாவராஹ ரூபமாகத் திருவவதரித்து, கடலினுள் புகுந்து, அந்த அஸுரனை நாடி, அவனை கண்டுபிடித்து, போர் செய்து தன்னுடைய கோட்டினாற் குத்திக் கொன்று, பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியை அங்கு இருந்து, கோட்டினாற் குத்தி எடுத்துக் கொண்டு வந்து பழையபடி விரித்து அருள, அந்த மகிழ்ச்சியினால் ஸ்ரீபூமிபிராட்டி வந்து எம்பெருமானை அணைக்க, திருமால் அவளது அழகைக் கண்டு மயங்கி, அவளோடு இருந்த போது கண்டார் உளர் என்கிறார்.
இருநிலம் என்பது பெரிய பூமி என்பதாகும், இரண்டு நிலம் என்ற பொருள் அல்ல.
Leave a comment