நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே, * நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன், * ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திர தன் தலையை, * பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்.
பெரியாழ்வார் திருமொழி 4.1.8
நாழிகையை மனதில் கொண்டு காத்து நின்ற ராஜாக்களுக்கு முன்னே பகல் முப்பது நாழிகையும் போயிற்று என்று தோன்றும் படி திருவாழி ஆழ்வானைக் கொண்டு பொருத்தியவன் தேவகி பிராட்டியினுடைய பிள்ளையாய் அவர்கள் காத்துக் கொண்டு நின்ற திருவாழியைக் கொண்டு சூரியனை மறைக்க ஜயத்ரதனுடைய தலையை பள்ளத்தில் உருளும்படி அம்பாலே பொருத்திய அர்ஜுனன் அருகே கண்டார் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அர்ஜுனன் பதின்மூன்றாம் நாள் போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை ‘நாளை அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்லாவிடில் தீக்குளித்து உயிர்விடுவேன்’ என்று சத்தியம் செய்ததை அறிந்த ஜயத்ரதனை ‘நீங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்ளுங்கள், நாங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்கிறோம்’ என்று பிரித்து கொண்டு, பகல் முப்பது நாழிகையும் அவனுக்கு ஒரு நலிவும் வராதபடி காத்துக் கொண்டு நின்ற அதிரத, மஹாரதரான, துரியோதனன் முதலிய ராஜாக்கள் முன்னே கண்ணன், அர்ஜுனனுடைய சபதம் பொய்த்து விடுமே என்று சிந்தித்து, ஸூர்ய அஸ்தமனம் ஆவதற்கு சில நாழிகைக்கு முன்னமே பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, தனது நினைவினை அறிந்து காரியம் செய்யும் தனது திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைக்க, அதனால் எங்கும் இருளடைந்தபோது, அர்ஜுனன் அக்னி ப்ரவேசம் செய்தலைக் களிப்புடனே காணுவதற்குச் ஜயத்ரதனை அழைத்து வர, இருள் பரப்பின திருவாழியை கண்ணன் விலக்கி விட, பகல் இன்னும் இருந்ததனால் உடனே அர்ஜுனன் ஜயத்ரதனுடைய தலை அதே பள்ளத்தில் கிடந்து உருளுமாறு அம்பாலே தலையை துண்டித்தான்.
Leave a comment