திவ்ய பிரபந்தம்

Home

4.1.7 வெள்ளை விளிசங்கு

பெரியாழ்வார் திருமொழி 4.1.7

வெண்மை நிறம் உடைய ‘அனுபவ கைங்கர்யங்களில் ருசி உடையார் வாருங்கள்’ என்று தன் சப்தத்தாலே அழைக்கும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும் வெவ்விதான ஜோதிஸ் உடைய திருவாழி ஆழ்வானையும் தரித்துக் கொண்டு இருக்கிற திருக்கைகளை உடையவன் இருக்கும் இடத்தை கேட்கிறீர்கள் என்றால், உங்களுக்கு சிறிது அடையாளம் சொல்லுகிறேன்; வாருங்கள் ; வெளுத்த குதிரை பூண்டு இருக்கும், வானரமான வெற்றிக் கொடியை உடைத்தான (அர்ஜுனனுடைய ) தேரின் மேல் அவனுக்கு சாரதியாய் முன்னே நின்று சைன்யத்திற்கு வஞ்சனத்துடன் பாரத யுத்தத்தை நடத்தியதை கண்டார் உளர் என்பது இந்த பாசுரத்தின் பொழிப்புரை.

திரு ஆழி, திரு சங்கும் கையுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தைத் தேடுவது முதல் அடியில் விளங்கும். துஷ்டர்களை எல்லாம் கொன்று பூமியின் சுமையைப் போக்குவதற்கு என்று திருவவதரித்த கண்ணன், அதற்கு உபயோகமாகப் பாண்டவர்க்குத் துணை நின்று பலபடியாக உதவி செய்து மகாபாரத யுத்தத்தை முதலில் இருந்து இறுதி வரை நடத்தி முடித்தது, மஹாபாரதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. சூதாட்டத்தில் இழந்த ராஜ்யத்தை மீட்க போர் செய்து பெறுவதில் தர்ம புத்திரனுக்கு துணையாக, அவர்களுடன் எப்போதும் இருந்து, அவர்கள் வெறுப்புக் கொள்ளாத வண்ணம், பலவாறு போதித்துப் போர் தொடங்கும்படி தூண்டியும், பின்பு போர்த் தொடக்கத்தில் “உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம்” என்று சொல்லி தளர்ந்த அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர் புரிய உடன்படுத்தியும், கண்ணனே பாரதப் போரை மூட்டியவன் ஆனான் என்று சொல்கிறார். கள்ளப்படைத் துணையாகி என்று சொல்லும்போது, படைக்குக் கள்ளத் துணையாகி, அதாவது, தான் சேனைக்குத் துணையாகிற போது இரண்டு பக்கமும் பொதுத் துணையாக இல்லாமல், பகலை இரவாக்கியும், ‘ஆயுதமெடுப்பதில்லை’ என்று சொல்லி வைத்து ஆயுதம் எடுத்தும், எதிரியுடைய உயிர் நிலையைக் காட்டிக் கொடுத்தும் போன்ற நிகழ்வுகள் அடக்கம் ஆகும். குரக்கு வெல் கொடி என்று சொன்னதில், பெருமாளுக்குப் (ராமனுக்கு) பெரிய திருவடி (கருடன்) கொடி ஆனது போல, அர்ஜுனனுக்கு திருவடி (அனுமன்) கொடி ஆகினான் என்று சொல்வது.

Leave a comment