திவ்ய பிரபந்தம்

Home

4.1.6 பொல்லா வடிவுடைப் பேய்ச்சி

பெரியாழ்வார் திருமொழி 4.1.6

கோர ரூபமான வடிவை உடைய பூதனை ஆனவள் மாளும்படியாக தன்னில் தான் சேர்ந்து இருந்துள்ள முலையிலே வாயை வைத்து உண்ண வல்லவனாய் நீலமணி போன்ற திருநிறத்தை உடையவன் பொருந்தி இருக்கும் இடத்தை தேடுகிறீர்கள் என்றால், பதினாராயிரம் தேவிமார்களோடு கூட சமுத்திர திவலைகள் வீசிக்கொண்டு இருக்கும் ஸ்ரீ துவாரகையில் தேவிமார்களெல்லாம் சுற்றம் சூழ்ந்து நிற்க சிம்மாசனத்திலே எழுந்து அருளி இருந்தவனை கண்டார் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சிறு குழந்தையாக இருந்த, கண்ணனை வஞ்சனையால் கொல்ல நினைத்த, பூதனை என்ற அரக்கி, வறண்டு வளைந்து எலும்பும் நரம்பும் தோன்றும் படியாக பொல்லாத உருவம் கொண்டு வந்தாள் என்பது பொல்லா வடிவுடை ஆச்சி என்கிறார்.

கம்ஸனால் ஏவப்பட்டு, தன்னுடைய உருவத்தை மறைத்து, பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி என்றபடி, முலையில் விஷத்தைத் தடவிக் கொண்டு, யசோதை போல் தாய் உருவம் எடுத்து, முலைபால் கொடுக்காவிட்டால் தரிக்க மாட்டாதவள் போல, அவனும் முலைபால் உண்ணாவிட்டால் அவனும் தரிக்க மாட்டாதவன் போல, அவள் முலை கொடுக்க, அதனை வாயில் வைத்து, ‘உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி’ என்கிறபடி வருகிறபோதே அவளின் உள்ளத்தில் உள்ள வஞ்சனத்தை அறிந்து, அவளை தாயாகவே நினத்து, தானும் பிள்ளையாகவே இருந்து, இப்படி விஷப்பாலை, அமுதமாகவே அமுது செய்து, அவளை முடிக்க வல்லவன் இந்த கண்ணன். விஷப் பால் அமுத செய்திட்டு அவளை முடித்து, ஜகத்து சேஷியான தன்னை நோக்கி கொடுப்பதால் நீல ரத்தினம் போன்ற திருமேனி நிறத்தை உடையவனுமான எம்பெருமான் கண்ணன், அவனை தேடுகிறீர்கள் என்றால், கடல் அலைகள் வீசி எறிகின்ற துவாரகையில், பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிம்ஹாசனத்தில் எழுந்தருளி எல்லோரும் சூழ இருப்பதை கண்டார் உண்டு என்கிறார்.

நரகாசுரனால் பல திசைகளில் இருந்தும் கொண்டு செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும், கண்ணன் நரகாஸுரனை வதம் செய்த பின்னர், மணந்துகொண்டு வந்தது சரித்திரம். இது ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவர் என்று சொல்லப் படுகிறது. கண்ணன் சத்தியபாமாவிற்காக கொண்டு வந்த, பரிஜாதம் முதலிய எல்லா பொருட்களையும் சேர்த்து எல்லாரும் சூழ என்று சொல்கிறார்.  

Leave a comment