திவ்ய பிரபந்தம்

Home

4.1.4 தோயம் பரந்த நடுவு

பெரியாழ்வார் திருமொழி 4.1.4

பரவின ஜலத்தினுடைய மத்தியத்திலே உபாயத்தாலே பழையதான வடிவை சுருக்கி கொண்ட ஆச்சரியத்தை உடைய அந்தக் குழவியை தேடினீர்கள் என்றால், ஒர் அடையாளம் உங்களுக்கு சொல்கிறேன்; கோபரான ஸ்ரீ கும்பருடைய பெண்பிள்ளையாய் மடப்பத்தை உடையவளான நற்பின்னைப் பிராட்டிக்காக போர் செய்ய எதிர்த்து வருகின்ற ரிஷபங்கள் ஏழையும் முடியும்படியாக போர் செய்து அந்த வருத்தத்தாலே குறு வியர்வை அரும்பின வடிவோடு தானுமாய் நின்றவனை உண்மையாகவே கண்டார் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பரந்த என்றதை ‘போது’ என்று கொண்டு, நடுவு சூழலில் தோயம் பரந்த போது என்று சேர்த்து ‘சுற்றும் கடலாய்’ என்ற பொருளில் கொள்ளலாம். அதன் இடையிலே உருண்டை வடிவாய் இருக்கிற பூமியெங்கும் தண்ணீர் சூழ்ந்த காலத்திலே என்று உரைக்கலாம். இவ்வுலகத்தை முழுவதும் பிரளய வெள்ளம் வந்து மூட, அதன்போது தன்னுடைய ‘காப்பாற்றும் பெரும் குணம் ‘ (ரக்ஷகத்துவம்) அழியாதபடி அவற்றைத் திருவயிற்றில் வைத்து, தனது பெரிய வடிவைச் சிறிதாகச் சுருக்கிக் கொண்டு ஒரு ஆலந்தளிரிலே எம்பெருமான் சிறுகுழந்தை போலத் துயின்ற வரலாறு முதலில் சொல்லப் பட்டது. சிறு வடிவைக் கொண்டு, பெரிய உலகங்களை வயிற்றிலே வைத்து ஒருவனாக ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின சாமர்த்தியத்தை மாயன் என்கிறார்.

நப்பினை பிராட்டிக்காக வலிமை மிகுந்த ஏழு எருதுகளை வெற்றி கொண்ட கண்ணன் வரலாறு இறுதி அடிகளில் கூறப்பட்டது.

இந்த பாட்டினால், ஆலிலை மேல் துயின்ற சரித்திரத்திற்கும் கண்ணனாய் அவதரித்தற்கும் உள்ள ஒற்றுமை கூறப்பட்டது.

Leave a comment