கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழிய, * சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல், * தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப * அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர்.
பெரியாழ்வார் திருமொழி 4.1.3
ஆளைக் கண்டால் கொல்லும் குவலயாபீடத்தின் கொம்பை பரித்தவனாய், (மகரிஷிகள் நலிகையாலே) ஜனஸ்தான வாசிகளான அங்குள்ள ராக்ஷஸர்களுடைய சேனையானது ஒருவர் இல்லாதபடி அழியும்படி போர் செய்தவனாய் வில்லாலே மராமரங்களை துளைக்கும்படி எய்த தேவனானவனை ஒரு இடத்தில் இருந்து தேடினீர்கள் என்றால்; வானரசேனையானது (பெருமாள் திருவடிகள் படப்போகின்றவோ என்ற கௌரவம் கொடுக்கும் வண்ணம் பெரிய மலைகளைக்) தலையினால் தாங்கிக் கொண்டு போய், அவைகளைக் கொண்டு அணையாக அடைக்க, அலை எறிகிற கடற்கரையில் எழுந்தருளி இருந்தவனை, அந்த ஸ்தலத்தில் கண்டவர் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கவளக் கடர் களிறு என்று சொல்லும்படி, துர் திரவியங்களை குடிக்க வைக்கப் பட்டதால், பைத்தியம் பிடித்து எதிரில் யாரையாவது காணில் கொல்லும் படி உள்ள குவலயா பீடம் என்ற யானை, கண்ணனை கொல்ல கம்ஸனால் ஏவப்பட்டது. அந்த யானையை முடித்தவனும், கர தூஷணாதி ராக்ஷஸர்களைக் கொன்றவனும், ஸுக்ரீவ மஹாராஜனுக்குத் தன்னுடைய திறமையைக் காட்டுவதற்காக, ரிஷிய முக மலையில் நின்ற ஏழு ஆச்சா மரங்களை ஒரே அம்பினால் சாய்த்தவனுமான எம்பெருமானைத் தேடுகின்றது முதல் இரண்டு வரிகளில் தெரியும். இலங்கைக்குச் செல்வதற்காகக் கடலின் இடையில் பாலம் கட்டுவதற்காக வானர வீரர்கள் மலைகளைக் தூக்கிக் கொண்டு சென்று, அவற்றால் கடலின் நடுவே அணைகட்டிய இராமன் அவ்வாறு அவை செய்கின்ற கைங்கர்யங்களை பார்த்து உகந்து கொண்டு அந்த கடற்கரையிலே வீற்றிருக்கக் கண்டார் உளர் என்பது, இறுதி இரண்டு அடிகளின் கருத்து.
கூடலர் என்பது கூடமாட்டாதவர்கள், எனவே, அவர்கள் பகைவர்கள் ஆனார்கள்.
“மராமரம் எய்த தேவனை” என்று கூறியது இராமனை ஆகும். ராமலக்ஷ்மணர்களுக்கும் ஸுக்ரீவனுக்கும் திருவடி (அனுமன்) மூலமாகத் தோழமை நேர்ந்த பின்பு, ஸுக்ரீவன் தன் வருத்தத்திற்குக்கான காரணங்களைக் கூற, அது கேட்ட இராமன், ‘நான் உனது பகைவனை எனது அம்பினால் அழித்து விடுகிறேன், அஞ்சாதே’ என்று அபயம் அளிக்க ஸுக்ரீவன் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றி பலவாறு சொல்லி, முடிவில், வாலி மரா மரங்களைகத் துளைத்ததையும், துந்துபியின் உடல் எலும்பை ஒரு யோஜனை தூரம் தூக்கி எறிந்ததையும் சொல்லி, பாராட்டி “இவ்வாறு பேராற்றல் அமைந்தவனை வெல்வது கூடுமோ?’ என்று சொல்ல. அது கேட்ட இளையபெருமாள்(இலக்குவன்) ‘உனக்கு நம்ப முடியவில்லை என்றால் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்று கேட்க, ஸுக்ரீவன, ‘இராமன் நீறு பூத்த நெருப்புப் போல தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும் போது சந்தேகம் உண்டாகின்றது; ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் தூக்கியெறிந்தால் எனக்கு விசுவாஸம் பிறக்கும்’ என்று சொல்ல, இராமன் அதற்கு ஒத்துக்கொண்டு, துந்துபியின் உடல் எலும்புக் குவியலைத் தனது கால் கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோசனை தூரத்திற்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராது (ஈரத்துடன்) இருக்கையில் வாலி இதனைத் தூக்கி எறிந்தான்; இப்போது உலர்ந்து விட்ட இதனைத் தூக்கி எறிதல் ஒரு சிறப்பு அன்று’ என்று கூற, பின்பு இராமன் ஒரு பாணத்தை ஏழு மரா மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழு உலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத்துணியை அடைந்தது என்பது ஆகும்.
இப்படி இராமனின் பாணம் அவரது அம்பறாத் துணியை திரும்ப சேர்ந்தது இராமாவதாரத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தன என்றும், மற்ற இரண்டு நிகழ்வுகள், இராவணனை வதம் செய்த போதும் என்றும், மாயமான் மாரிசனை வதம் செய்த போதும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சந்திர பிரபையுடன் ஆன அம்புடன் சேவை சாதிக்கும் இடம் தில்லைவளாகம் என்ற க்ஷேத்திரம் ஆகும்.
குவலயாபீடத்தின் கொம்பைப் பறித்தது கிருஷ்ண அவதாரம் ஆகும் . மரா மரங்களைத் துளைத்தது இராம அவதாரம் ஆகும். இருந்தாலும், தர்மம் ஒன்று என்றே கொண்டு, அவன் இருந்த இடம் தேடுகிறீர்களாகில் என்று இரண்டையும் ஒன்றாய் சேர்த்தார்.
Leave a comment