நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம், * ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல், * காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்றிறுக்க, * வேந்தர் தலைவன சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர்.
பெரியாழ்வார் திருமொழி 4.1.2
நாந்தகம் என்னும் வாளையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஸ்ரீ கௌமோதகி என்ற கதையையும் ஜெயகோஷத்தையும் ஸ்ரீ சார்ங்கம் என்ற வில்லையும் திருவாழி ஆழ்வானையும் தரித்துக் கொண்டு இருக்கிற பெருமையை உடைய இராமன் இருக்கும் இடம் தேடுகிறீர்கள் என்றால்; செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக அரசர்களுக்கு எல்லாம் தலைவர் ஆன ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்தில் எழுந்து அருளி வல்லமை பொருந்திய வில்லை முறிக்க கண்டவர்கள் உள்ளனர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருக்கரங்களில் இருந்து பிரியாது எதிரிகளை அறுக்ககக்கூடிய ஸ்ரீ நந்தகம் என்ற வாள் அல்லது கத்தி. திருவாய் கரையில் இருந்து தன்னோசையாலே எதிரிகளை அவியப்பண்ணும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு. கைவிடாமல் இருந்து எதிரிகளை நெரிய அடிக்கும் ஸ்ரீ கௌமோதகி என்ற கதை. ஜெயகோஷங்கள் எழுப்பி, எதிரிகள் மேலே சரமழை போல பொழியும் ஸ்ரீசாரங்கம் என்ற வில். கருதுமிடம் பொருது கை வந்து இருக்கும் திருவாழி என்ற சங்கு.
நாந்தகம், பாஞ்சன்னியம், கௌமோதகி, சாரங்கம், சுதர்சன சக்கரம் ஆகிய இவை பஞ்சாயுதம் எனப்படும்.
பஞ்சாயுதங்களைத் திருக்கைகளினால் ஏந்தி கொள்ளும் பெருமை பொருந்திய பெருமாளைத் (ஸ்ரீராமனை) தேடுவது முதல் இரண்டு அடிகளில் விளங்கும். ராஜதர்மத்தோடு தத்வஞானத்தையும் கொண்டதால், ராஜாக்களுக்கு ராஜாவான ஜனக மஹாராஜனின் சிவ தனுஸை அவனது அரண்மனைக்கு வந்து முறிக்கும் போது அப்பெருமானைக் கண்டார் உண்டு என்று சொல்வது இறுதி அடிகளில் சொல்லப் படுகிறது.
Leave a comment