கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீள் முடியன், * எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல், * அதிரும் கழற் பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய், * உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்.
கிருஷ்ணாவதாரத்தில் ஆசை கொண்ட பெரியாழ்வார் அந்த அவதாரம் தொடக்கம் முதல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்து பாடிய ஆழ்வார், ஒரே சமயத்தில் கண்ணனையும், இராமனையும் அனுபவிக்க எண்ணி, இரண்டு தோழியர் மூலம் இராமன், கண்ணன் இருவர் பெருமைகளையும், குண நலன்களையும் பேசி, அதனை தொடர்ந்து, இராமாவதாரத்தில் உடன் அவதரித்த சீதா பிராட்டியின் கிருபையை வெளியிட, இராவணன் பிரித்தான் என்று ஒரு காரணம் கொண்டு, லங்காவில் எழுந்தருளிய போது, பெருமாள் (ஸ்ரீராமன்), அனுமன் தான் இந்த காரியத்தை செய்ய வல்லவன் என்று திருவுள்ளம் கொண்டு அவனிடம் அடையாளங்களை கூறி தன்னுடைய மோதிரத்தையும் கொடுத்தருளியதையும், கருத்தில் கொண்டு, அவை நிகழ்ந்த போது பிராட்டி மகிழ்ச்சி அடைந்ததை, பாடிய பாடல்களை சென்ற பதிகத்தில் ஆழ்வார் அனுபவித்தார்.
இந்த பதிகத்தில், ராம கிருஷ்ணா அவதாரங்களோடு மற்ற அவதாரங்களையும், அவற்றின் ஐக்கியத்தையும் மனதில் கொண்டு, அந்த அவதாரங்களை நேரில் காண ஆசைபட்டு, ‘நேரில் கண்டார் உண்டா’ என்று கேட்கும் ஒரு பிரிவினரும், மனதில் உண்டான அபரிமிதமான அனுபவங்களை கண்களின் மூலம் கண்டதாக சொல்லும் மற்றொரு பிரிவினரையும் கண்டு ஆழ்வார் இந்த பதிகத்தில், ஒவ்வொரு பாடலிலும், இரு பிரிவினருக்கும் ஒரு வரலாறு சொல்லி அனுபவிப்பதை காண்போம்.
பெரியாழ்வார் திருமொழி 4.1.1
(எண்ணிறந்த) கிரணங்களை உடைய, ஆயிரம் ஆதித்தியர்கள் சேர்ந்து பிரகாசித்தது போல இருக்கும் தேஜசஸை உடைய உயர்ந்த திரு அபிஷேகத்தை உடையவனாய், ஒப்பற்ற பெருமை உடைய சக்கரவர்த்தி திருமகன் எழுந்து அருளி இருக்கும் இடத்தை தேடுகிறீர்கள் என்றால் (சொல்லுகிறேன்); அதிரும் வீரக்கழலை உடைய போர் செய்யப் பதைக்கிற தோள்களை உடையவனான ஹிரண்யாஸூரனுடைய மார்பினை, (தேவர்கள் கொடுத்த வாக்குகளுக்கு விரோதம் வராதாபடி, நரசிம்ம ரூபம் உடையவராய் இரு பிளவாகப் பிளந்து ரத்தத்தை அளைந்த கையோடு இருந்தவனை உள்ளபடி கண்டவர்கள் உளர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஒரே காலத்தில் ஆயிரம் ஆயிரம் கதிர்களை கொண்ட ஆயிரம் சூரியர்கள் உதித்ததை போல், கண் கொண்டு காண முடியாதபடி, ஜ்வலிக்கின்ற கிரீடத்தை உடையவனாய் மிக சிறந்த அனுபவத்தை கொடுக்கும் சக்கரவர்த்தித் திருமகன் (ஸ்ரீராமன்) எழுந்தருளி இருக்குமிடம் எது, என்று தேடுகின்றது, முதல் இரண்டு அடிகளில் விளங்கும். இப்படி சொல்வதால், இராவணன் வதம் முடிந்து, விபீஷணனுக்கு லங்காவில் அரசு சூடி, திரு அயோத்தியில் பட்டாபிஷேக இராமனை சொல்கிறார் எனலாம். ஸ்ரீ ராமனின் ரூபகுணங்களாலும், ஆத்ம குணங்களாலும் மானிடர்களால் செய்ய முடியாத காரியங்களை செய்யக்கூடிய ஒப்பில்லாத வைபவங்களை உடையவனான, எல்லோருடைய நெஞ்சங்களையும் கவரக்கூடிய ஸ்வபாவத்தால், இராமன் என்று பெயர் பெற்றவன் என்பதை எதிரில் பெருமை இராமனை என்பதால் சொல்கிறார்.
பிரம்மலோகம் வரை எல்லோரையும் தன் கீழாக்கி அரசாண்டவன் என்பதாலும், சப்தம் ஒலிக்கின்ற வீரக் கழல்களை உடையவன் என்பதாலும், தனக்கு ஒரு எதிரி இல்லை என்பதால் போர் செய்ய துடிக்கின்ற தோள்களை உடையவனும் ஹிரண்யண் என்பதை, அதிரும் கழற் பொருதோள் இரணியன் என்பதால் சொல்கிறார்.
வீரத் தண்டையை அணிந்துள்ள கால்களையும் தோள் மிடுக்கையும் உடையவனாய் ப்ரஹ்லாதனை வருத்தின ஹிரண்ய கசிபுவின் உயிரை முடிப்பதற்காக நரஸிம்ம உருவத்துடன் தூணில் தோன்றி, அந்த அசுரனது மார்பை இரு துண்டமாகப் பிளந்து ரத்தத்தை பெருக்கி அதிலே தோய்ந்த கையும் தானுமாய் நின்ற நிலைமையில் எம்பெருமானைக் கண்டார் உண்டு என்று விடை அளிப்பது பின்னடிகளில் விளங்கும். இதனால் இராமனாய் அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்தும் எல்லாம் ஒரு ஈச்வரனே என்றும் அது பரமாத்மாவின் ஐக்கியமே என்றும் கூறியதாக கொள்ளலாம்.
“ஒரு செயலுக்காக உருவ மாற்றங்கள் கொண்டாலும், அதனை மேற்கொண்ட பரமாத்மா ஒன்றே, அதனால் இது ஐக்கியம் என்று சொன்னார். அதனால் ‘இது உள்ளபடி காண்கை” என்று அறியபடுகிறது.
Leave a comment