திவ்ய பிரபந்தம்

Home

3.10.9 திக்குநிறை புகழாளன்

பெரியாழ்வார் திருமொழி 3.10.9

மலர்கள் அணிந்த கூந்தலை உடைய சீதை, எல்லா திசைகளிலும் நிறைந்த புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுடைய தீ வளர்கின்ற யாகத்திலே விஸ்வாமித்திரரோடு எழுந்து அருளின காலத்திலே மிகப் பெரிதான சபையின் நடுவிலே தனக்கு சிவனிடம் இருந்து பெற்ற வில்லை முறித்த பெருமாளுடைய திருவாழி மோதிரத்தை பார்த்து ஹனுமானே, நீ முன் சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒத்து இருந்தது என்று சொல்லியது இந்த பாடலின் பொழிப்புரை.

மிதிலா நகரத்து அரசனான ஜனக மகாராஜன் தன் குலத்துப் பூர்வீக ராஜாவான தேவராதனிடம் சிவபிரானால் கொடுக்க பட்டு இருந்த ஒரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைப்பவனுக்கே தன் மகளான  ஸீதையைக் கல்யாணம் செய்து கொடுப்பது என்று அறிவிப்பு செய்ய, வேள்வி முடிந்த விச்வாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற இராமபிரான் வில்லை எடுத்து வளைக்கத் தொடங்குகையில், வில் முழுவதும் இரண்டு துண்டாக  நன்றாய் முறிந்து விழுந்தது என்பது வரலாறு.

திக்கு நிறை புகழாளன் ஜனகன். தத்வ ஞானத்தாலும், பராக்ரமத்தாலும் கர்மானுஷ்டாங்களை செய்து வருவதாலும் புகழாளன் ஆகிறார். தத்துவ ஞானத்தினால் பரவின புகழை உடையவனான ஜனகராஜனின் சபைக்கு விசுவாமித்ர முனிவனோடு கூட எழுந்தருளினார்

அங்கு விச்வாமித்ர முனிவனோடு பெருமாளுடைய (ஸ்ரீராமனுடைய) திருக்கரத்தினில் அந்த திருவாழியைப் பார்த்ததையும் பின்பு திருமணத்தின் போது அந்த திருவாழி தன் கையில் உறுத்தியதையும், எல்லா காலங்களிலும் பெருமாள் திருக்கரத்தில் இருந்தததையும் சீதை, நினைவுகூர்ந்து, பிராட்டி சிரமேற்கொண்டு மகிழ்ந்து சிறிய திருவடியை இராவணனின் மாயமாக வந்தது இல்லை என்றும், உண்மையான ராமனின் தூதன் என்று அறுதி இட்டதையும் கூறுகிறது.

Leave a comment