திவ்ய பிரபந்தம்

Home

3.10.8 மைத்தகு மா மலர்க் குழலாய்

பெரியாழ்வார் திருமொழி 3.10.8

மை போல் கறுத்து சிறந்த மலரை அணிந்த கூந்தலை உடைய விதேஹராஜன் குலம் விளங்க வந்து அவதரித்தவளே! அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக் கேட்டு அருள வேண்டும். சுக துக்கங்களில் பெருமாளோடு ஒத்தவர் என்கிற புகழை உடையவராய் வானரர்களுக்கு அதிபதியான சுக்ரீவர் பெருமாள் உடன் கூட இருந்து, ஸ்வாமியான பெருமாள் இந்த அடையாளங்களை அத்தனையும் இந்த வரிசையில் வந்தவை (என்று அறிவித்து) இது அவர் கையில் தரித்து இருந்த திருவாழி மோதிரம் (என்று மோதிரத்தையும் கொடுத்தான்) என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பெருமாள் (ஸ்ரீராமன்) உம்மைத் தேடிக் கொண்டு வரும் போது வழியில் ஸுக்ரீவ மஹாராஜனோடு அக்னி சாட்சியாகத் தோழமை பூண்டான்; அந்த இருவரும் ஒன்றாக இருந்து ஒவ்வொரு திக்குக்குப் பல கோடிக் கணக்கான வானரர்களை உம்மைத் தேடும்படி அனுப்பினார்கள். அப்போது ஸுக்ரீவ மஹாராஜன், என்னிடத்தில் விசேஷ அபிமானம் வைத்து இருப்பதை உணர்ந்து, “இவனாலே நமது காரியம் கைகூடும்” என்று என்னிடத்தில் இராமன் விசேஷ அருள் செய்து அருளி, இந்த அடையாளங்களைச் சொல்லி அனுப்பினார். அதனால், இப்படி அடையாளங்களை யான் கூறினேன்; அன்றியும், தனது பெயர் உள்ள மோதிரத்தையும் கொடுத்து அருளினார் என்று அநுமான் இராமனுடைய திருவாழியையும் காட்டி, தான் ராம தூதன் என்பதை வற்புறுத்திப் பிராட்டியின் ஸந்தேஹகத்தைப் போக்குகின்றான்.

மை போன்ற கருமையுள்ள மலர் கொண்ட கூந்தலை உடையவளே என்று சொன்னது இந்த சூழ்நிலைக்கு பொருந்தாது என்பதால் இந்த சூழலுக்கு பொருத்தமான கூந்தலை உடையவளே என்கிறான். பேணாததாலும், பிரிவாற்றாமையாலும், புழதி படிந்துள்ள பூ மாறி உள்ள குழல் என்று கொள்ளலாம்.

முதலடியில் விளி என்று சொன்னது ‘வைதேகி’ என்றதனால், தனது உடம்பை கவனிக்க மாட்டாள் என்ற அர்த்தத்தில் வரும். “நமக்கு இன்பமும் துன்பமும் ஒன்றே” என்று இளையபெருமாள் (லக்ஷ்மணன்) சொல்ல, அதன் பிறகு பெருமாளுடைய (ஸ்ரீராமன்) இன்பத் துன்பங்களைத் தன்னதாக நினைத்து வந்ததனால், ஸுக்ரீவனை “ஒத்தபுகழ் வானரங்கோன்” என்று சொல்கிறார். கோன் என்றது, இப்படி பல திசைகளுக்கும் பெரும் வானர படைகளை அனுப்பும் அளவுக்கு பெரிய வானர படையை உடையவன் என்பதால் ஆகும்.

அத்தகு சீர் என்று சொன்னது, உம்மைப் பிரிந்த பின்பு ஊணும் உறக்கமும் இல்லாமல், கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே, ஏதேனும் அனுபவிக்க தக்க பொருட்களை கண்டால், உம்மையே நினைத்து வருந்துகின்றார் என்றுள்ள நிலைக்கு தகுந்த அன்பு என்னும் குணத்தை உடையவன் என்ற கருத்தில் வருகிறது. அயோத்தி கோன் என்றது, பரதன் ஸ்ரீ ராமனின் திருவடிநிலைகளை பெற்று அவற்றைக் கொண்டு ஆட்சி செய்வதால் பெருமாளே கோன் ஆகிறார்.

Leave a comment