மின்னொத்த நுண்ணிடையாய் மெய் அடியேன் விண்ணப்பம், * பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட, * நின்னன் பின் வழி நின்று சிலை பிடித்து எம் பிரான் ஏக * பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஒர் அடையாளம்.
பெரியாழ்வார் திருமொழி 3.10.7
மின்னோடு ஒத்து இருந்துள்ள நுண்ணிய இடையை உடையவளே, குற்றமற்ற சேஷ பூதனான நான் செய்கிற விண்ணப்பத்தைக் கேட்டு அருள வேண்டும். பொன் போன்ற நிறத்தை உடைய ஒரு மானானது பர்ணசாலையின் முன்னே வந்து புகுந்து மனோகரமாக துள்ளி விளையாட தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று வில்லை எடுத்துக் கொண்டு பெருமாள் அத்தைப் பிடிப்பதாக நெடுந்தூரம் எழுந்து அருள பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டுச் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்லக் கருதிய இராவணனது கட்டளையினால் அவனுக்கு மாமன் முறையான மாரீசன் என்ற ராக்ஷஸன் மாயையினால், இந்த உலகத்தில் கண்டறியாத ஒரு வடிவை எடுத்து, பொன் போல இருக்கிற நிறத்தையும், பலவிதமான ரத்தினங்கள் போல இருக்கின்ற புள்ளிகளையும் கொண்ட, பொன் மான் உருவம் கொண்டு தண்டகாரணியத்தில் பஞ்சவடியிலே பிராட்டியின் (ஸீதை) எதிரில் சென்று உலாவுகையில், இளையபெருமாள்(லட்சுமணன்) இது மாய மான் என்று சொல்லவும் கேளாமல், பிராட்டியின் வேண்டுகோளின்படி அதனைப் பிடிப்பதற்கு இராமன் நெடுந்தூரம் தொடர்ந்து சென்றும் பின்னும் ஓட்டம் காட்டிய அதனை மாய மான் என்று அறிந்து அம்பு எய்து வீழ்த்த, மாரீசன் இறக்கும்போது ‘ஹா! ஸீதே! ஹா! லக்ஷ்மணா! ஹா!!’ என்று இராமன் கதறுவது போலக் கூப்பிட, அதனைக் கேட்ட ஸீதை, லட்சுமணனை விரைந்து சென்று இராமனை காப்பாற்று என்று சொல்ல, லக்ஷ்மணன் சீதையை தேற்றவும் தேறாமல் இராமனுக்கே ஆபத்து வந்திட்டது என்று பலவாறு இளையபெருமாள் (இலக்குவன்) மீது கடும் சொற்களைச் சொல்ல, உடனே இளையபெருமாள் இராமனுள்ள இடத்திற்குப் போவதாகச் சீதையை விட்டுச் சென்றான் என்பதும் ஒர் அடையாளம் என்று சொல்கிறார்.
Leave a comment