திவ்ய பிரபந்தம்

Home

3.10.6 சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை

பெரியாழ்வார் திருமொழி 3.10.6

சித்திரக்கூட மலையில் இருக்கும்பொது, (இந்தரன் மகனான ஜயந்தன் ) பறவைகள் கூட்டத்தில் மிகவும் தாழ்ந்ததான காக்கை வடிவாய்க் கொண்டு (தேவரீர்) திருமூலைத் தடத்திலே தீண்ட (அப்போது பெருமாள் உணர்ந்து அருளி) பிரம்மாஸ்த்ரத்தை ஒரு தர்ப்பத்தில் இட்டு அந்த காகத்தின் மேலே செலுத்த (அது பின் தொடர்ந்து செல்ல, அதில் இருந்து தப்ப வழி தேடி) எல்லா உலகங்களிலும் ஓடித் திரிந்து (அப்போது தனக்கு ஒரு புகலிடம் கிடைக்காததால், மீண்டும் வந்து) யாவரும் வியக்கத் தக்க யாவரையும் பிரமிக்கவைக்கும் வல்லவனான உனக்கு அபயம் என்று அடைக்கலம் புகுந்தமை தோன்றக் கூப்பிட முன்பு தலை அறுப்பதாகத் தொடர்ந்த அஸ்திரம் தானே அந்த காகத்தின் ஒரு கண்ணை அறுத்துப் போட்டதும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வனவாச காலத்தில் சித்திரகூட மலைச் சாரலிலே பெருமாளும் (ஸ்ரீராமரும்) பிராட்டியும் (சீதாதேவியும்) ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியின் அழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் தீண்ட வேண்டும் என்ற தீய கருத்தினை கொண்டு தேவ வேடத்தை மறைத்துக் காக வேடம் பூண்டு, பிராட்டியின் மடியிலே பெருமாள் (ஸ்ரீராமன்) பள்ளி கொண்டு அருளுகையில், தாய் என்று அறியாமல் பிராட்டியின் திருமார்பினில் குத்த, பெருமாள்(ஸ்ரீராமர்) மிக கோபம் கொண்டு ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் பிரம்மாஸ்த்திர மந்திரத்தை பிரயோகித்து அந்தக் காகத்தின் மேல் குறி வைத்து செலுத்த, அந்த காகம் அந்த அஸ்திரத்திற்கு பயந்து, தப்பி வழிதேடிப் பல இடங்களிலும் ஓடிச் சென்று, சென்ற இடங்களில் எல்லாம், ஒருவரும் ஏற்றுக் கொள்ளாததால் மீண்டும் பெருமாளையே (ஸ்ரீராமனையே) சரணம் அடைய, எம்பெருமான் அதன் மேல் கருணை கொண்டு, காகத்துக்கு உயிரை எடுக்காமல், அந்த அஸ்திரம் வீணாகாமல் காகத்தின் ஒரு கண்ணை எடுத்ததுடன் அதனை விட்டது ஒரு அடையாளம் என்று சொல்கிறார்.

ஸ்ரீ ராமாயணத்தில் ஸுந்தர காண்டத்தில் இந்த வரலாறு திருவடிக்குப் (அனுமனுக்கு) பிராட்டி அருளிச் செய்வதாகக் காணப்படுகின்றது. இங்கு பிராட்டிக்குத் திருவடி கூறுவதாகச் சொல்கிறது. சரண்யனான பெருமாளின் (ஸ்ரீராமன்) குணத்தை சொல்லி, ‘நின் அபயம் யான்’ என்றது ஸம்ப்ரதாயத்தின் ‘அந்ந்யகதித்வம்’ என்ற ஒரு முக்கியமான கருத்தை சொல்கிறது.

Leave a comment