மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து, * ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி, * வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற, * ஆயர்கள் ஏற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
பெரியாழ்வார் திருமொழி 3.9.9
வஞ்சகம் உடைய சகடாசுரனை கட்டுக்குலையும்படி திருவடிக்கால் உதைத்தும் யாமளார்ஜுனர்களை முறித்தும் இடையர்களோடு காடு சென்று பசுக்களின் திரளை காப்பாற்றியும் அழகிய வேய்ங்குழலை ஊதி வித்தகனாய் நின்ற இடையர்க்குத் தலைவனானவனை பாடிப்பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சகடாசுரனை உதைத்து தள்ளி கொன்றும், இரட்டை மருத மரங்களை இற்று விழும்படி பண்ணியும், ஆயர்களோடு சென்று அவர்களில் முதன்மையானவனாக பசுக் கூட்டங்களை புல்லும் தண்ணீரும் உள்ள இடங்களாகப் பார்த்து அவை வயிறு நிறையும்படி மேய்த்தும் அவற்றை காப்பாற்றியும், நாட்டு பசுக்கள் போல அன்றி, கண்ணனின் குழல் ஓசையே தாரகமாகக் கொண்டு உயிர் வாழும் பசுக்கள், சிதறிப் போகாமல் இருக்கவும், அவை குவிக்கைக்கும் மீட்கைக்கும், மூங்கினால் செய்யபட்ட புல்லாங்குழலை ஊதி ஆயர்களுக்கு தலைவன் என்ற செருக்குடன், வித்தகனாக இருக்கும் கண்ணனை பாடுக என்று சொல்கிறார். பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசு மேய்ப்பது மகிழ்ச்சி என்று இருப்பவர் என்று திருவாய்மொழி 10.3. 10 ல் “திவத்திலும் பசுநிரை மேய்ப்பு ‘ என்று சொல்வதை இங்கே குறிப்பிட்டு உள்ளார்.
Leave a comment