திவ்ய பிரபந்தம்

Home

3.9.10 காரார் கடலை

பெரியாழ்வார் திருமொழி 3.9.10

ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்கு இருந்துள்ள கடலை, மலைகளைக் கொண்டு அடைத்து இலங்கையில் புகுந்து பெருமாள் (ஸ்ரீராமன்) வீரத்தை மதியாத இராவணனுடைய கீரீடம் தரித்த அழகிய பத்துத் தலைகளையும் அறுத்துப் போட்டு, அவன் தமியான வீபீஷணனுக்கே நெடுங்காலம் நடக்கும்படி ஆதி ராஜ்யத்தை கொடுத்தவனாய் எவ்வளவு காலம் பூஜித்தாலும் திருப்தி பிரவாத அமிர்தம் போன்ற யோக்கியனானவனை, அயோத்தியில் உல்லார்க்கு ராஜாவானவனை பாடுக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இலங்கைக்குச் சென்று ராவணனை முடிப்பதாகத் திருவுள்ளம் பற்றி வானர சேனைகளுடன் கடற்கரையை அடைந்த இராமபிரான், கடலைக் கடக்க உபாயம் சொல்ல வேண்டும் என்று கடல் அரசனாகிய சமுத்தர ராஜனை வேண்டி, தர்ப்ப சயனத்தில் படுத்து மூன்று நாள் பொறுமையாக இருக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மேன்மையைக் கருதாமல் கவனிக்காமல் இருந்து விடவே, ஸ்ரீராமன் அது கண்டு சீற்றம் கொண்டு,  அனைவரும் நடந்து செல்லும்படி கடலை வற்றச் செய்வேன் என்று அஸ்திரத்தைத் எடுக்க, உடனே சமுத்திரராஜன் அஞ்சி நடுஙகி ஓடி வந்து இராமனைச் சரணம் அடைந்து, கடல் வடிவமான தன் மேல் அணை கட்டுவதற்கு உடன்பட்டு ஒடுங்கி நின்றது சரித்திரம்.

அதில் தன் சாமர்த்தியம் தோன்ற குரங்குகளைக் கொண்டு மலைகளினால் அணை கட்டி, மண் மூலம் கடப்பதற்கு அரியதாக இருக்கும் எழுபது வெள்ளம் சேனையை கொண்டு இலங்கையினுள் புகுந்து போர் களத்தில் பத்து தலை ராவணனை அழித்து, அவனது தம்பியாகிய ஸ்ரீவிபீஷணனுக்கு முடிசூட்டி அருளின வரலாறு சொல்கிறார்.

பெரிய திருமொழி (4.4.6)ல் ‘தான் போலும் என்றெழுந்தான் தரணி யாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள், கோன் போலும் என்று எழுந்தான் குன்ற மன்ன இருபது தோளுடன் துணித்த ஓருவன் கண்டீர்‘ என்று சொல்லியபடி ‘இராமன் என்கிற ஒரு சிறு மனிதன் பூமியை எல்லாம் தானே ஆள்பவனாக நினைத்து, அஹங்காரப் படுகின்றான்; அதனை அறிந்தும் அந்த ராமனைத் தண்டியாமல் பொறுத்திருப்பவன் ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’ என்று இருந்த இராவணனுடைய தலைகளை திருச்சரங்களால் ஒவ்வொரு தலையாக அறுத்தபடி என்று இல்லாமல், பெரிய திருமொழி (2.4.5)ல் “காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீண் முடி பத்தும் அறுத்தமரும்,’ சொல்லியபடி இன்று இவனை முடிக்க சரியான காலம் என்று பிரம்மாஸ்திரம் கொண்டு பத்து தலைகளையும் ஒரே நேரத்தில் அறுத்து போட்டதைச் சொல்கிறார்.

இதே ஆழ்வார் பெரியாழ்வார் திருமொழியில் (2.6.9) ல் ‘மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு, என்னிலங்கு நாமத்தளவும் அரசு என்ற’ சொல்லியபடி விபீடணனுக்கு அரசு அளித்தான் என்கிறார்.

Leave a comment