கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட, * மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறா தொழிய, * குலக் குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப, * இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்.
பெரியாழ்வார் திருமொழி 3.10.3
கைகேயி கூனியாலே கலக்கப்பட்ட பெரிய மனதை உடையவளாய், ஸ்ரீ ராமன் வனவாசமும் பரத ராஜயாபிஷேகமும் ஆகிற இரண்டு வரங்களை இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்க, தசரத சக்ரவர்த்தியும் மலக்கப்பட்ட கம்பீரமான மனதை உடையவனாக மறுக்க மாட்டாமல் சோகித்து இருக்கும் போது (சுமந்திரனைக் கொண்டு பெருமாளை (ஸ்ரீ ராமனை) அழைப்பித்து) இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரனே, வனவாசம் போ என்று நியமிக்க தன்னோடு இளைய பெருமாளோடு (லக்ஷ்மணன்) தண்ட காரண்யத்திலே எழுந்து அருளினதும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மா மனத்தனளாய்க் கைகேசி என்று சொன்னது, முன்பு சொந்த மகனான பரதனை விட பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கம் அதிக ஸ்னேகிதமாகவும், தசரத சக்ரவர்த்தியின் பிரியமானவளாக இருந்ததாலும் பெரிய மனத்தள் என்கிறார்.
கைகேயியின் வார்த்தைகளுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த தசரதனிடம் அறுபதினாயிரம் ஆண்டுகள் சத்தியங்களை காப்பாற்றி வந்தவன் இப்போது செய்த சத்தியத்தை மீறப் போகிறானோ, அப்படி என்றால் தான் உயிர் விடுவேன் என்று சொன்ன சொற்களை கேட்டு மலக்கிய மா மனத்தன் ஆகினான் என்கிறார்.
திருப்பாற்கடலை மந்தரமலை கலக்கினால் போல, பரிசுத்தமாக இருந்த கைகேயியின் மனத்தை மந்தரை என்னும் கூனி கலக்க, கைகேயி தான் மனம் கலங்கியது போலவே தசரதனையும் ராம விரகத்தை நினைந்து கலங்கச் செய்து, அப்போது சுமந்திரனைக் கொண்டு தசரதர் முன்னிலையில் இராமனை காட்டுக்கு அனுப்ப, இராமன் லக்ஷ்மணனோடு காட்டுக்குப் புறப்பட்டதும் ஓர் அடையாளம் ஆகும் என்கிறார்.
Leave a comment